ஊரடங்கு காலத்தில் செய்திகளை சேகரிக்க களத்தில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி வேண்டுகோள்!

Filed under: தமிழகம் |
கோவை, ஏப்ரல் – 24
வே. மாரீஸ்வரன்
 
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்  கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள்  அருண்குமார், அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி சாந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) காளிதாஸ், இ. எஸ். ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
அமைச்சர் எஸ். பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசும்போது, 
 
முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்றினை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றார்கள். அதேபோன்று பொதுமக்களில் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். முதலமைச்சர் அவர்களின் ஆணை மற்றும் அறிவுரைகளின் படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, உள்ளிட்ட துறைகள் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகிக்கப்பட்டு 3 ஆயிரத்து 389 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 3 ஆயிரத்து 255 நபர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதில், 134 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் காரணமாக இதுவரை 83 நபர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் கொரோனா குறித்த செய்தியினை களத்திற்கு நேரடியாகச் சென்று செய்தி சேகரித்து வரும் பத்திரிகையாளர்கள் அனைவரும் பாதுகாப்புடனும் சமூக இடைவெளியிணை கடைப்பிடித்து பணியாற்றிட வேண்டும் என்று மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்தார்.