எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

பாஜகவின் எச்.ராஜா பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2018ல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், ஈரோடு டவுன் போலீசார், எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எச்.ராஜா. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, எச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எச் ராஜா தெரிவித்த கருத்துக்கள், எந்த விதத்திலும் பெண்களை கொச்சைப்படுத்தவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உங்கள் தரப்பு வாதங்களை ஏற்க முடியாது என்றும் அரசியலில் இருப்பவர்கள் தாம் என்ன பேச வேண்டும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்து, எச்.ராஜா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.