ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை!

Filed under: அரசியல்,இந்தியா |

P.Chidambaramபுதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவன பங்குகள், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு விற்கப்பட்டன. ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஏர்செல் பங்குகள் கைமாறியதற்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.

ஆனால், ரூ.600 கோடி வரையிலான அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மட்டுமே நிதி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதற்கு மேற்பட்ட முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டிதான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தனி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியது. அதன் அடிப்படையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சமீபத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது. இந்த தகவலை சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ப.சிதம்பரம் கூறுகையில், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்துக்கு ஒப்புதல் அளித்தது குறித்து என்னிடம் சி.பி.ஐ. ஒரு சிறிய வாக்குமூலத்தை பெற்றது. ஏற்கனவே பத்திரிகை அறிக்கையில் சொன்னதைத் தான் நான் மீண்டும் கூறினேன். அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. என்றார்.