ஐந்து வருடங்களுக்கு பின் நாகூர் தர்கா நிர்வாகம் பரம்பரை போர்ட் ஆப் டிரஸ்டிகள் வசம் ஒப்படைப்பு

Filed under: தமிழகம் |

கடந்த 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தால் நாகூர் தர்கா எட்டவாது நாட்டாண்மை வழக்கில் முடிவு காணும் வரை தற்காலிகமாக செயல்பட இடைக்கால நிர்வாகிகள் (Adhoc Administrators) நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டனர். 2019ம் ஆண்டு இறுதியில் 8வது ஸ்தானம் உறுதி செய்யப்பட்டது.

 

இதனிடையே மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகூர் தர்கா இடைக்கால நிர்வாகி திரு அக்பர் (ஓய்வு நீதிபதி) மற்றும் திரு அலாவுதீன் (ஓய்வு இஆப) ஆகியோரால் தமிழக வக்ப் வாரியம் மீது தொடரப்பட்ட ரிட் அப்பீல் வழக்கு எண் 327/2022 வழக்கில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மாண்புமிகு திரு.முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் மாண்புமிகு திரு. நீதியரசர் டி.பாரத சக்ரவர்த்தி முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நாகூர் தர்கா நிதி எவ்வாறு விரயம் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டது. மனுதாரரை கடுமையாக கண்டித்த நீதிமன்றம் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடைக்கால நிர்வாகம் இத்தனை வருட காலம் தொடர்வதை கண்டித்து, நாகூர் தர்கா இடைக்கால நிர்வாகிகள் இன்றைய தேதி முதல் நாகூர் தர்காவை நிர்வாகிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்கள் பின்னர் தமிழக வக்ப் வாரியத்திடம் அனைத்து பொறுப்புகளையும் வழங்க உத்தரவிட்டார்கள். அதன்படி தமிழக வக்ப் வாரியம் இடைக்கால நிர்வாகிகள் அறையை சீல் செய்து கடந்த இரு வாரங்களாக நாகூர் தர்காவை நிர்வாகம் செய்து வந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற விசராணையில் 8வது ஸ்தானம் நிரப்பபட்டதால் நிர்வாகத்தை தமிழக வக்ப் வாரியம் பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிகள் 11 நபர்களிடம் ஒரு வாரத்திற்க்குள் வழங்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

அதன்படி தமிழக வக்ப் வாரிய செயல் அலுவலர் திரு வசீர் இன்று காலை நாகூர் தர்கா அலுவலகம் வந்து நாகூர் தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் அபுல் பதஹ் சாஹிப், முகம்மது பாக்கர் சாஹிப், மஸ்தான் சாஹிப், சேக் ஹசன் சாஹிப், ஹாஜா மெய்தீன் சாஹிப், சுல்தான் கபீர் சாஹிப், செய்யது காஜி உசேன் சாஹிப், செய்யது காமில் சாஹிப், சுல்தான் கலீபா சாஹிப், ஹாஜா நஜ்மூதின் சாஹிப் மற்றும் செய்யது யூசுப் சாஹிப் ஆகிய 11 போர்ட் ஆப் டிரஸ்டிகள் வசம் நிர்வாக பொறுப்பினை ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் நாகூர் தர்கா பிரசிடன்ட் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் மற்றும் மானேஜர் ஜெகபர் உசேன் முன்னிலை வகித்தனர். வரும் வாரம் போர்டு ஆப் டிரஸ்டிகள் தங்களுக்குள் ஒருவரை மானேஜிங் டிரஸ்டியாக தேர்வு செய்து கொண்டு ஸ்கீம் படி நிர்வாகிப்பர் என்பது குறிப்பிடதக்கது.

ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் பாரம்பரியமான நிர்வாகம் அமைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி என தர்கா பங்குதாரர்கள் மற்றும் நாகூர் தர்கா சாஹிப்மார்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.