கஞ்சா வழக்கில் கோவை பிரபல கல்லூரி மாணவர் கைது.!

Filed under: தமிழகம் |

கோவை, ஜூன் 24

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரத்தில் சரவணம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எண்ணற்ற பிரபல கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

கோவை அவினாசி ரோட்டில் மூன்றெழுத்து பெயரில் இயங்கி வரும் பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த போதை பொருளான கஞ்சாவுடன் சரவணம்பட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கோவை சித்ரா அருகே உள்ள பூங்கா பூங்கா நகர் பகுதியில் வசிப்பவர் ஸ்டீபன் செல்வன் இவரது மகன் லிலியன் செப் கோவை அவினாசி ரோட்டில் உள்ள பிரபல மூன்றெழுத்து கல்லூரியில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு படிக்கும்போது சக மாணவர்களுடன் சேர்ந்து போதைப் பொருளான கஞ்சா புகைப்பதற்கு அடிமையாகி விட்டாராம்.

பின்பு, போதை வஸ்தான கஞ்சாவுக்கு ரெகுலர் கஸ்டமர் ஆகிக்கொண்டு கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் கல்லூரிகளில் படித்து வரும் சில மாணவ மாணவிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ய தொடங்கினாராம். இப்படி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக தனது வியாபாரத்தை கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்து விரிவுபடுத்தி வந்தாராம். இந்நிலையில், கடந்த 23/ 6/ 2020/ அன்று சரவணம்பட்டி டூ துடியலூர் செல்லும் சாலையில் ஒரு தனியார் ஹோட்டல் முன்பு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ய வைத்திருந்த போது மாணவன் ஒருவர் சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டாராம். உடனே, ஸ்பாட்டுக்கு வந்த சரவணம்பட்டி காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த லிலியன் செப் ஐ பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த கல்லூரி முன்னாள் மாணவர் லிலியன் செப் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அந்த கல்லூரி முன்னாள் மாணவரிடம் ஒரு கிலோவிற்கு மேல் போதை பொருளான கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது உடனே காவல் நிலையத்திற்கு அள்ளிக் கொண்டு சென்று விசாரித்த போது நான் அவினாசி ரோட்டில் உள்ள மூன்றெழுத்து பிரபல கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் என்று கூறியதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறையில் லிலியன் செப் சிக்கிக்கொண்ட தகவல் சில கல்லூரி மாணவர்களுக்கு தெரியவர எங்கே நமது பெயர் வந்து விடுமோ நம்மை போலீஸ் தேடி வருமோ என்று அதிர்ச்சி அடைந்து உள்ளார்களாம்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிபதிகள் முன்பு ஆஜர் செய்துவிட்டு சிறையில் அடைத்தனர். என்னதான் பட்டினத்து வாழ்க்கை பணக்காரத் தோரணை என்று சில கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியில் படித்து வந்தாலும், தனது பெற்றோர்களின் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் தனது எதிர்கால வாழ்க்கையை சிந்திக்காமல் அயல்நாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி மது, கஞ்சா போன்ற போதைக்கு அடிமையாகி தனது வாழ்க்கையை தன்னைத் தானே கெடுத்துக் கொள்கிறார்கள் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள் சிலர்.