கட்டிடம் இடிந்ததில் இளம்பெண் பலி!

Filed under: சென்னை |

பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆனந்த் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்துள்ளது. ஜேசிபி எந்திரம் மூலமாக நேற்று கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து இடிக்கும் பணிகள் நடந்து வந்துள்ளது. அப்போது வெளிப்புற சுவர் இடிந்து நடைபாதையில் சென்று கொண்டிந்த மூன்று பேர் மேல் விழுந்தது. அதில் ஒருவர் சிறுகாயங்களுடன் தப்பிய நிலையில் இருவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். இதுகுறித்து அறிந்து உடனடியாக சம்பவ இடம் விரைந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் பத்மப்ரியா என்ற இளம்பெண் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்னரே உயிரிழந்த நிலையில், விக்னேஷ்குமார் என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஜேசிபி எந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகர், டிரைவர் பாலாஜி ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் கட்டிட உரிமையாளர், பொறியாளர், ஒப்பந்தக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்தக்காரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.