கண்தானம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் என்றும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளை ஈடுபடுத்தி, உள்ளூர் மொழிகளில், பரவலான மல்டிமீடியா பிரச்சாரங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
36-வது தேசிய கண் தான இருவார விழா கொண்டாட்டங்களில் உரையாற்றிய அவர், நன்கொடையாளர் திசுக்களின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி பற்றிக் குறிப்பிட்டார். “மாற்று அறுவை சிகிச்சைக்கு நன்கொடையாளர் கார்னியா திசுக்கள் இல்லாததால், பலர் பார்வையின்மையால் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. எனவே, கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும்” என்றும் அவர் கூறினார்.
கட்டுக்கதைகள் மற்றும் தவறான நம்பிக்கைகள் காரணமாக, பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறந்த பின் அவர்களின் கண்களை தானம் செய்ய முன்வருவதில்லை என்று குறிப்பிட்ட வெங்கையா நாயுடு, தங்கள் கண்களைத் தானம் செய்யும் உன்னதமான செயல், கருவிழி வெண்படலப் பார்வையற்றவர்களுக்கு கண்களைக் கொடுப்பதன் மூலம் பார்வையை மீட்டெடுத்து இந்த அழகான உலகைப் பார்க்க உதவும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று கூறினார்.
“நாம் அனைவரும் நம் கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டால், கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பார்வையளிக்க முடியும். எனவே, இது அடையக்கூடிய ஒரு இலக்கு. இதை அடைய நாம் அயராது பாடுபட வேண்டும்” என்றார் அவர். விழிப்புணர்வை ஊக்குவித்தல், நன்கொடையாளர் திசுக்களை உருவாக்குவதை எளிதாக்குதல், சமமான விநியோகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலமாக, நன்கொடையாளர் திசுக்களுக்கான தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க கட்டமைக்கப்பட்ட கண் வங்கி அமைப்பின் அவசியத்தை குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
“பகிர்வோம், அக்கறை கொள்வோம்” (‘ஷேர் அண்ட் கேர்’) என்பது இந்திய தத்துவத்தின் மையமாகும் என்பதை மீண்டும் வலியுறுத்திய அவர், “சிபி மற்றும் ததிச்சி போன்ற அரசர்களும் முனிவர்களும் தங்கள் உடலை தானம் செய்த கலாச்சாரம் நம்முடைய கலாச்சாரம். இந்த உதாரணங்கள் நம் சமூகத்தின் முக்கிய விழுமியங்கள், இலட்சியங்கள் மற்றும் பாரம்பரியங்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன” என்றார். மக்களை உத்வேகப்படுத்துவதற்கும், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்கும், இந்த விழுமியங்கள் மற்றும் வழக்கத்திலுள்ள கதைகளை, நவீன சூழலுக்கேற்ப நாம் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “ஒருவர் தனது உடல் உறுப்பு ஒன்றை தானம் செய்வதன் மூலம், இன்னொருவர் மிக நிறைவான வாழ்க்கையை வாழ உதவுவது மட்டுமல்லாமல், சமுதாயத்தின் நன்மைக்காக மற்றவர்களும் பணியாற்ற ஒரு முன்மாதிரியாக அமைகிறார்” என்று அவர் கூறினார்.
பெருந்தொற்று காரணமாக கார்னியா மீட்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான திசுக்களின் பற்றாக்குறக்கு வழிவகுத்தன என்றும் காத்திருப்போர் பட்டியலை அதிகரித்தன என்றும் குறிப்பிட்ட நாயுடு, திசு கிடைப்பதில் தற்போதுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, நீண்டகாலம் திசுக்களைப் பாதுகாத்தல்; நன்கொடையாளர் திசு தேவையில்லாத மாற்று அறுவை சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துதல் போன்ற புதுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
“கொவிட் -19 பற்றிய நமது புரிதல் அதிகரிக்கையில், கண் வங்கி மற்றும் திசு மீட்பு தொடர்பான வழிகாட்டுதல்களை நாம் திருத்தியமைக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார். கண்புரை, கிளாகோமா மற்றும் கண் தொடர்பான பிற பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க நாம் கண் சிகிச்சை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், நாடு முழுவதும் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் கண் பராமரிப்பை வலுப்படுத்தும் ஒரு பல்முனை உத்தியை உருவாக்க வேண்டிய உடனடி அவசியமும் உள்ளது என்றார். இந்த சேவைகள் கிராமப்புறங்களில், குறிப்பாக நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கிடைப்பதை உறுதி செய்வது முக்கியம். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு விரிவான கண் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை அதிகரிப்பதில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் என்ஜிஓக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
கிராமப்புற மக்களில் பெரும் பகுதியினர் தரமான கண் பராமரிப்பு இல்லாதவர்கள் என்று குறிப்பிட்ட அவர், கிராமப்புறங்களில் வசிக்கும் பலர், தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் அதிக விலை மிக்க சிகிச்சைகளைப் பெற முடியாது என்றார். “எனவே, தரமான சிகிச்சையை வழங்குவதற்காக நமது கண் சிகிச்சைக்கான. பொது மருத்துவமனைகளில், நவீன தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்”. கார்னியல் பார்வையின்மையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, பார்வைக் கொடையளித்து, அவர்களுக்கு அதிகாரம் வழங்கி, கடந்த ஐம்பதாண்டுகளாக, பாராட்டத்தக்க பணியைச் செய்து வருகிறது என்று தேசிய கண் வங்கியில் உள்ள குழுவுக்கு குடியரசு துணைத்தலைவர் பாராட்டு தெரிவித்தார்,.
பேராசிரியர் ரன்தீப் குலேரியா, இயக்குநர், எய்ம்ஸ், புது தில்லி; பேராசிரியர் ஜீவன் எஸ் திதியால், தலைவர், கண் மருத்துவ அறிவியல் ஆர் பி மையம், எய்ம்ஸ், புது தில்லி; பேராசிரியர் ராதிகா டாண்டன், கூட்டுத்தலைவர், தேசிய கண் வங்கி; பேராசிரியர் நம்ரதா ஷர்மா, அதிகாரி -பொறுப்பு, தேசிய கண் வங்கி; பேராசிரியர் எம். வானதி, அதிகாரி-பொறுப்பு, தேசிய கண் வங்கி; டாக்டர்.மன்பிரீத் கவுர், உதவி பேராசிரியர், எய்ம்ஸ்; எய்ம்ஸ் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் நன்கொடையாளர் குடும்பங்கள்; அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கண் வங்கிகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியல் கலந்து கொண்டனர்.
36 வது தேசிய கண் தான விழாக்களை ஏற்பாடு செய்ததற்கும், இதுபோன்ற சவாலான காலங்களில் கூட நேர்மறையான, நம்பிக்கையூட்டும் செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கும், புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் தேசிய கண் வங்கிக் குழுவினர் அனைவருக்கும், எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்பதை நான் கவுரவமாகக் கருதுகிறேன்.
நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, கருவிழி வெண்படலத்தில் ஏற்படும் குறைபாடுகளின் காரணமாக நேரிடும் பார்வையின்மையே உலகில் பார்வையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய 5 சதவிகிதத்தினர் விழி வெண்படல நோய்களால் மட்டுமே பார்வையற்றவர்களாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கை கூறுகிறது. இந்தியாவில், ஏறத்தாழ 68 லட்சம் மக்கள் குறைந்தபட்சம் ஒரு கண்ணில் கருவிழி வெண்படலப் பார்வையின்மையால் பாதிக்கப்படுகின்றனர்; இதில், 10 லட்சம் பேர் இரு கண்களிலும் பார்வைக் குறைபாடுடையவர்கள்.
இந்தியாவில் 50 வயதிற்குட்பட்ட நோயாளிகளின் பார்வையின்மைக்கு முக்கிய காரணம், கருவிழி வெண்படலப் பார்வையின்மையாகும் என்றும், இது 37.5 சதவீதமாகும் என்றும் 2019 ஆம் ஆண்டின் தேசிய பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவை கவலையளிக்கும் புள்ளிவிவரங்ள்.
மேலும், 50 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளில் பார்வையின்மைக்கு இரண்டாவது முக்கிய காரணம் விழி வெண்படலப் பார்வையின்மையே ஆகும். நம் நாட்டில், விழி வெண்படலப் பார்வையின்மையுடன் வாழும் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் குழந்தைகளின் நிலை கற்பனை செய்யக்கூட முடியாதது. தற்போது, விழி வெண்படலப் பார்வையின்மைக்கு ஒரே தீர்வு, கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமேயாகும். நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறபடி, கார்னியாக்கள் நன்கொடையாளர்களிடமிருந்து அவர்கள் இறந்த பிறகு பெறப்பட்டு கார்னியல் பார்வையின்மையால் அவதிப்படும் நபரின் கண்களில் பொருத்தப்படுகின்றன. இருப்பினும், நன்கொடையாளர் திசுக்களின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே பெருத்த இடைவெளி உள்ளது.
மாற்று அறுவை சிகிச்சைக்கு நன்கொடையாளர் கார்னியா திசுக்கள் இல்லாததால், பலர் கார்னியல் பார்வையின்மையால் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமாது.
எனவே, கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலங்களின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளை ஈடுபடுத்தி, உள்ளூர் மொழிகளில், பரவலான மல்டிமீடியா பிரச்சாரங்கள் தொடங்கப்பட வேண்டும். தங்கள் கண்களைத் தானம் செய்யும் உன்னதமான செயல், கருவிழி வெண்படலப் பார்வையற்றவர்களுக்கு, கண்களைக் கொடுப்பதன் மூலம், பார்வையை மீட்டெடுத்து, இந்த அழகான உலகைப் பார்க்க உதவும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். நாம் அனைவரும் நம் கண்களைத் தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டால், கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் பார்வையளிக்க முடியும். இது அடையக்கூடிய ஒரு இலக்கு. அதை அடைய நாம் அயராது பாடுபட வேண்டும். 80 – 90 சதவீதம் பார்வையின்மை தவிர்க்கப்படக்கூடியது. எனவே, கண்புரை, கிளாகோமா மற்றும் கண் தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க நாம் கண் சிகிச்சை வசதிகளை அதிகரிக்க வேண்டும். கிளாகோமாவினால் ஏற்படும் பார்வையின்மையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் தடுக்கலாம்.
அதே நேரம், நாடு முழுவதும் நோய்த்தடுப்பு, குணப்படுத்துதல், கண் பராமரிப்பை வலுப்படுத்துதல் பற்றிய ஒரு பன்முக உத்தியை உருவாக்க வேண்டிய உடனடி அவசியமும் உள்ளது. மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும், தனியார் துறைகளும், விரிவான கண் பராமரிப்புச் சேவைகள் மூலம் பார்வையின்மையைக் குறைக்க, தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றுகின்றன என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சேவைகள் கிராமப்புறங்களில், குறிப்பாக நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கிடைப்பதை உறுதி செய்வது முக்கியம். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு விரிவான கண் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை அதிகரிப்பதில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். கிராமப்புற மக்களில் பெரும் பகுதியினர் தரமான கண் பராமரிப்ப்பு இல்லாதவர்களே. கிராமப்புறங்களில் வசிக்கும் பலர், தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் அதிகமான செலவு பிடிக்கும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே, தரமான சிகிச்சையை வழங்குவதற்காக நமது கண் சிகிச்சைக்கான. பொதுத்துறை மருத்துவமனைகளில், நவீன தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ‘பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம்’ விரிவான உலகளாவிய கண் பராமரிப்புச் சேவைகள் மற்றும் தரமான சேவை வழங்குவதன் மூலம் பார்வைக் குறைபாட்டைத் தடுப்பதையும், சிகிச்சையளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது உண்மையில் பாராட்டத்தக்கது. கண் தானம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல்; நன்கொடையாளர்களின் கண்களைச் சேகரித்தல், மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தல், ஆராய்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1965ஆம் ஆண்டு எய்ம்ஸ் ஆர்பி மையத்தில் உள்ள தேசிய கண் வங்கி நிறுவப்பட்டது என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வை ஊக்குவித்தல், நன்கொடையாளர் திசுக்களை உருவாக்குவதை எளிதாக்குதல், சமமான விநியோகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலமாக, நன்கொடையாளர் திசுக்களுக்கான தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க கட்டமைக்கப்பட்ட கண் வங்கி அமைப்பு முக்கியமானதாகும். கடந்த 56 ஆண்டுகளில், தேசிய கண் வங்கி 31,000 க்கும் மேற்பட்ட கார்னியாக்களைச் சேகரித்து 20,000 க்கும் மேற்பட்ட கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளது என்று அறிகிறேன். கோவிட் பெருந்தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில், தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கண் வங்கி, ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது.
தேசிய கண் வங்கியில் உள்ள குழு, கடந்த ஐம்பதாண்டுகளாக, கார்னியல் பார்வையின்மையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, பார்வைக் கொடையளித்து, அவர்களுக்கு அதிகாரம் வழங்கி, பாராட்டத்தக்கப் பணியைச் செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பார்வையை மீட்டெடுக்கும் உன்னத முயற்சிக்கு தேசிய கண் வங்கியில் உள்ள ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
சிறு குழந்தைகளுக்குக் கண் நோய் ஒரு பிரச்சினை என்பது இரகசியமல்ல.
நகர்ப்புறப் பள்ளிக் குழந்தைகள் கண் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற எண்ணம்முன்னர் இருந்தது. ஆனால் இப்போது கிராமப்புறப் பள்ளிகளில் கூட, சில குழந்தைகள் மயோபியாவால் (கிட்டப்பார்வை) பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். வீடியோ கேம்கள், மொபைல்கள், கம்ப்யூட்டர்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் குழந்தைகளின் அதிகப்படியான ஈடுபாடு அவர்களின் கண் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கிறது. எனவே, தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாட்டின் பாதகமான விளைவுகளைத் தடுக்க, குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மின்னணு சாதனங்களுக்கு குழந்தைகள் அடிமையாகி விடுவது அதிகரித்து வரும் கவலைக்குரிய பிரச்னை குறித்து நாம் உடனடியாக கவனம் கொள்ள வேண்டும் என்று நான் சமீபத்திய மாதங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன்.
இன்று, உலகம் முழுவதும் கோவிட் -19 பெருந்தொற்றுநோயின் தொடர்ச்சியான அலைகளுடன் போராடி வருகிறது. உலக அளவில், அனைத்து நாடுகளும் உள்ளூர்ப் பரவல் மற்றும் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றன. இந்தப் புதிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது எல்லா இடங்களிலும் சுகாதார உள்கட்டமைப்பு நிரம்பி வழிகிறது. அதிக மக்கள் தொகை, குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், பெருந்தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகப்பெரிய பணியாற்றியுள்ளது. எனினும், பல வழக்கமான அவசரமற்ற மருத்துவ நடவடிக்கைகள் இந்தத் தொற்றுநோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கண் வங்கி அமைப்பும் இவ்வாறு பாதிக்கப்பட்டவைகளில் ஒன்றாகும்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் கண் வங்கி வழிகாட்டுதல்களின் படி, பொதுமுடக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் போது நன்கொடையாளரிடமிருந்து கார்னியா மீட்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வது போன்றவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டிரந்தது. தேசிய மற்றும் அரசு விதித்த பொதுமுடக்கக் காலங்களின் போது, கிட்டத்தட்ட மிகக்குறைவான கார்னியா மீட்டெடுப்புக்கு இதுவே காரணமாக அமைந்தது என நான் நம்புகிறேன். இந்தியா முழுவதும் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைகள் கிட்டத்தட்ட 52 சதவீதம் குறைந்தன நன்கொடையாளர்கள் சேகரிப்பில் 63 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்தக் கிருமி பற்றிய நமது அறிவு அதிகரிக்கும் போது, நன்கொடையாளர் கார்னியா வழியாக கிருமி பரவுவதற்கு அதிக சாத்தியமில்லை என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர். நம் நாட்டில், மருத்துவமனை கார்னியா மீட்புத் திட்டம் மூலம் கோவிட் அல்லாத மருத்துவமனைகளில் கண் வங்கி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், பெருந்தொற்று காரணமாக கார்னியா மீட்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான திசுக்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தன என்று என்னிடம் கூறப்பட்டுள்ளது.
இது நன்கொடையாளர் திசுக்களின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையேயான இடைவெளியை மேலும் அதிகரிக்க வழிவகுத்தது. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்தது. திசு கிடைப்பதில் தற்போதுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, நீண்டகாலம் திசுக்களைப் பாதுகாத்தல்; நன்கொடையாளர் திசு தேவையில்லாத மாற்று அறுவை சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துதல் போன்ற புதுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
கோவிட் -19 பற்றிய நமது புரிதல் அதிகரிக்கையில், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் சவால்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, கண் வங்கி மற்றும் திசு மீட்பு தொடர்பான வழிகாட்டுதல்களை நாம் மாற்ற வேண்டியிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை மீண்டும் தொடங்குவது கார்னியல் திசுக்களுக்கான தேவைகளை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற கடினமான காலங்களில், கார்னியல் திசு கிடைப்பதற்கும், அதன் உண்மையான தேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான நமது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
நம் நாடு ‘வசுதேவ குடும்பகம்’ என்பதை நம்பும் நாடு. ‘ஷேர் அண்ட் கேர்’ பகிர்வோம், அக்கறை கொள்வோம் என்பது இந்தியத் தத்துவத்தின் மையமாகும் என்பதை நினைவில் கொள்வோம்.
ஷிபி மற்றும் ததிச்சி போன்ற அரசர்களும் முனிவர்களும் தங்கள் உடலை தானம் செய்த கலாச்சாரம் நம்முடையது. இந்த உதாரணங்கள் நம் சமூகத்தின் முக்கிய மதிப்புகள், இலட்சியங்கள் மற்றும் பாரம்பரியங்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. மக்களை உத்வேகப்படுத்துவதற்கும், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்கும் நவீன சூழலில் இந்த மதிப்புகள் மற்றும் வழக்கத்திலுள்ள கதைகளை நாம் மறுவரையறை செய்ய வேண்டும். ஒரு உடல் உறுப்பைத் தானம் செய்வதன் மூலம் இன்னொருவர் மிகவும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவுவது மட்டுமல்லாமல், சமுதாயத்தின் நன்மைக்காக மற்றவர்களும் பணியாற்ற ஒரு முன்மாதிரியாகவும் கொடையாளர் அமைகிறார். கட்டுக்கதைகள், தவறான நம்பிக்கைகள் காரணமாக, பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறந்த பின் அவர்களின் கண்களை தானம் செய்ய முன்வருவதில்லை.
எனவே, இத்தகைய தவறான நம்பிக்கைகளை அகற்றுவது மற்றும் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். நம் சக மனிதர்களில் தேவைப்படுபவர்களுக்கு நாம் “பார்வைப் பரிசு” தானம் செய்வோம். உங்கள் கண்களைத் தானம் செய்வதை விட நீங்கள் இறந்த பிறகும் வாழ சிறந்த வழி என்ன. இங்குள்ள ஒவ்வொருவரும் தனது கண்களை தானம் செய்வதாக உறுதிமொழி ஏற்பதோடு மட்டுமல்லாமல், “பார்வைப் பரிசு” அளிப்பதற்காக இந்த உன்னத செயலைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு செய்தியுடன், நான் என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன் – ““கண் தானம் செய்யுங்கள். உங்கள் கண்களை மரணத்திற்குப் பிறகும் வாழச் செய்யுங்கள்”.
ஜெய் ஹிந்த்!