அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவையொட்டி, திமுகவின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆற்றியுள்ள அரும்பணிகள், சாதனைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். அவரது உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மே 28-ம் தேதி, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவால் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினமான இன்று முதல்முறையாக அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முரசொலி அலுவலகத்திலும், கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 1,000 படங்களுக்கு உரையாடல்களை எழுதியவர் ஆரூர்தாஸ். தன் ஊரான திருவாரூரில் பாதி பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என்று பெயர் வைத்துக் கொண்டவர். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் பணிப்புரிந்த இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.