காணாமல்போன பி.ஜே.பி.!

Filed under: அரசியல்,இந்தியா |

இந்திய கட்சிகளின் ஆணவ அரசியலுக்கு ஆப்பு அடித்த சாட்சியாக டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை கூறுகிறார்கள். பா.ஜ.க. தலைமையின் அதிகார மமதையும், ஆணவ நடவடிக்கைகளும் பா.ஜ.க. படுதோல்வி அடையச் செய்ததாக கூறப்படுகிறது. டெல்லி மாநில தலைவர்களின் ஆலோசனையை மீறி அதிகார போதை ஏறி, தன்னிச்சையாக நடந்து கொண்ட முறைக்கு ஆப்பு அடித்தார்கள் டெல்லி பா.ஜ.க. தலைவர்கள்.

மேலும் வளரவே வழியில்லாத மேற்கு வங்க பா.ஜ.க., தேவையின்றி மம்தாவை உசுப்பிவிட்டு, தற்போது டெல்லியில் பலமிழந்து நிற்கும் அவல நிலையை பெற்றுள்ளதாகக் கூறுகிறார்கள். தமிழகத்தில் தேடி கண்டுபிடிக்கும் நிலையில் உள்ள பா.ஜ.க.வின் தமிழக தலைவர்களின் பில்டப்புகளினால், திருவரங்கத்தில் டெபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் துதிபாடிகளின் ஆதிக்கத்தால் தற்போது வட்டார காங்கிரசாக மாறும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இளைய தளபதி ராகுல்காந்தியை கண்டாலே பயந்து ஓடும் நிலையில் தொண்டர்கள் உள்ளார்கள். காங்கிரஸ் நியமித்த வட்டார செயலாளர்கள் உள்பட பலர் காங்கிரசை வைத்து வியாபாரம் செய்து செல்வம் பெருக்கும் முறையில் தேர்ச்சிபெற்று உள்ளார்கள் என குறிப்பிடுகிறார்கள். உண்மையான தொண்டர்கள் அலட்சியப்படுத்தப்பட்டு அடிமையாக கிடக்கிறார்கள் என்ற சுட்டெரிக்கும் உண்மை வெளிப்படுகிறதாம்.

பீகாரில் ஜனநாயகம் கேலிகூத்தாக மாறி இருப்பதாக கவலை கொள்கிறார்கள். பிரதமர் பதவியை எதிர்பார்த்த நிதிஷ்குமாருக்கு, முதல்வர் பதவியும் போயிற்று கட்சியையும் ஆட்சியையும் தன் கைப்பிடிக்குள் வைக்க ஆதிதிராவிட இனத்தவரான மஞ்சி என்பவரை பீகார் முதல்வராக்குகிறார். பாவம், மஞ்சி முதல்வரானவுடன், ஆதிதிராவிட அதாவது தலித் இனத்தலைவராக தோன்ற முயற்சி செய்தார். இவரது பல அரசியல் கருத்துக்கள் நகைச்சுவையாக மாறின. இவருடைய ஆணவத்தை குறிப்பிட்டு கேவலமான முறையில் கட்சித்தலைவர்கள் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்களாம். இதன் உச்சகட்டமாக பா.ஜ.க.வுடன் இணைந்து முதல்வர் பதவியை தக்கவைக்க துணிந்தாராம். உடனே நிதிஷ்குமார் தன் கட்சியைவிட்டு முதல்வரை நீக்கிவிட்டார். நீக்கப்பட்ட முதல்வர் தற்போது தனி சட்டமன்ற உறுப்பினர் என்கிறார்கள். எந்தக்கட்சியையும் சாராத தனி சட்டமன்ற உறுப்பினர் அதிக எண்ணிக்கை இல்லாத பா.ஜ.க.வுடன் எப்படி முதல்வர் பதவியை தக்கவைக்க முடியும்? என்ற சட்ட சிக்கல் எழுந்துள்ளது. சந்தர்ப்பம் கிடைத்தால் ஜனநாயக மரபுகளைக்கூட அழிக்க இந்திய கட்சிகள் தயாராக இருப்பதை இந்திய மக்கள் வெறுக்கிறார்கள்.

ஊழல் என்பது தற்போது தனிப்பட்ட உணர்ச்சிகளின் சுயநல குரலாக ஒலிக்கிறது. ஊழலின் அளவுகோல் சுயநலத்தன்மையின் கணக்காக உள்ளதாம். சட்டவிதிப்படி செலுத்தப்பட்ட வரிக்கணக்குகளை கணக்கில் எடுதுதுக்கொள்ள மறுத்து, நீதி வழங்கும் தீர்ப்புகூட சுயநலத்தன்மையின் எடுத்துக்காட்டாக உள்ளதாம்.
பல கோடிகள் மதிப்புள்ள ஊழல்கள் வெளிப்படையாக செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் அதை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் இல்லை என்று ஒதுக்கப்படும் சூழ்நிலையை ஊழல் என்ற அரக்கன் மறைமுகமாக செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ஊழல் வழக்குகளில் தண்டனை அறிவித்த பல தீர்ப்புகள் நேர்மையான நீதிபதிகளின் முன் விசாரணைக்கு வரும்போது தீர்ப்புகளின் மீது சந்தேகம் எழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக குறிப்பிடுகிறார்கள். வழக்கறிஞர்களின் அலட்சியத்தால் தண்டனை பெறும் மனுதாரர்கள் மேல்முறையீட்டிலும் அதே வழக்கறிஞர்களின் அலட்சியத்தாலும், சதியாலும் நீதியை நிலைநாட்ட தவறும் அவலநிலை தொடர்வதைக் கண்டு சட்ட வல்லுநர்கள் கவலை கொள்கிறார்கள். உணர்ச்சிகள் பொங்கும்போது மனிதர்கள் அதாவது பெண்கள் உட்பட செயல்படுத்தும் செயல்கள், நிதிக்கு உட்பட்டு இருந்தாலும் திறமையுள்ள சுயநலத்தன்மை கொண்ட நபர்களால் திசை திரும்பும்போது, தண்டனைக்கு உள்ளாகின்ற கொடுமைக்கு ஆளாக நேருவதாக சுட்டிக்காட்டுகிறார்கள். சூழ்நிலையை உணர்ந்து, சதி திட்டங்களை புரிந்து செயல்படும் நபர்கள் வாழ்க்கையில் வெற்றிக்கனியை எளிதில் எட்டிவிடுவது நடைமுறை வாழ்க்கை.