கெஜ்ரிவால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

அமலாக்கத் துறை டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து கடந்த 2ம் தேதி டில்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார். முன்னதாக மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என அர்விந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்ற அமர்வு மறுத்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டில்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.