கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!

Filed under: இந்தியா,உலகம்,தமிழகம் |

சென்னை,மே 12

வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எந்த நேரமும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக குவைத் அரசு உறுதியளித்துள்ள போதிலும், அவர்களை தாயகம் அழைத்து வருவதில் தாமதம் காட்டப்படுவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். உலகின் மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை  இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் வாடுகின்றனர். அவர்களிலும் உரிய ஆவணம் இன்றி பணியாற்றி வரும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அவர்களுக்கு வேலையோ, தங்குமிடமோ இல்லாத நிலையில், அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 30ஆம் தேதி வரை குவைத் செயல்படுத்தியது. அதற்கு விண்ணப்பித்தோரில் 7340 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு தற்காலிக இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, எந்த நேரமும் இந்தியா திரும்ப வசதியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்காமல் தெருக்களில் உணவின்றி வாடி வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையாக நேற்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு பொது மன்னிப்பு பெற்றவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழர்கள் உள்ளிட்ட 7340 இந்தியர்களும் தாயகம் திரும்புவதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்கும் போதிலும் அவர்கள் எப்போது தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்து இந்திய அரசிடமிருந்தும், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்தும் இதுவரை எந்த பதிலும்  இல்லை. அதனால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

இந்தியர்கள் அனைவரையும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ள குவைத் அரசு, அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஆனால், அந்த உணவு  ஒத்துக் கொள்ளாததால் ஏராளமான தமிழர்கள் உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இதையும் தாண்டி குவைத்தில் வாழும் தமிழர்களுக்கு கொரோனா தாக்குதல் அச்சம் அதிகரித்திருக்கிறது. குவைத்தில் நேற்று வரை மொத்தம் 9286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் அதிகபட்சமாக  3375 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 400 தமிழர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனைகளில் உரிய மருத்துவம் வழங்கப்படவில்லை.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அவருடன் ஒரே அறையில் இருந்த மேலும் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் படவில்லை. மாறாக, அடிப்படை வசதிகள் கூட இல்லாத முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் பணியாற்றி வந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குவைத் நாட்டவர் அண்மையில் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மட்டும் தான் அங்குள்ள மருத்துவமனைகளில் முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு கொரோனா நோய் ஏற்படும் பட்சத்தில் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டால் அது தான் அதிகபட்ச சிகிச்சை ஆகும்.

இத்தகைய சூழலில் இந்தியா திரும்புவதற்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடையே  கொரோனா அச்சம் அதிகரித்துள்ளது. சிறிய அறைகளில் 20-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒரே கழிப்பறையை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டியிருப்பதால், அவர்களில் எவருக்கேனும் கொரோனா இருந்தால் மற்றவர்களுக்கும் பரவி விடக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர். குவைத்தில் பொதுமன்னிப்பு பெற்றவர்கள் எல்லாம் சட்டவிரோதமாக அங்கு குடியேறியவர்களோ  அல்லது குற்றம் செய்தவர்களோ அல்லர். மாறாக, தங்களுக்கு வேலை வழங்கியவர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் இந்தியா திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, விமானக் கட்டணத்தையும் ஏற்கத் தயார் என்று குவைத் அரசே அறிவித்த பிறகும், தமிழர்களை அழைத்து வருவதில் தாமதம் கூடாது.

உடனடியாக சிறப்பு விமானங்களை அனுப்பி குவைத் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் ஒரு வாரத்திற்குள் தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.