கொரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துதலா? மக்களைப் பீதியில் ஆழ்த்தும் உத்தரவுகளை தவிர்க்கவேண்டும் – டிடிவி தினகரன் !

Filed under: சென்னை |

சென்னை, ஜூன் 12

சென்னையில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றாலே, சோதனை செய்துகொள்கிறவரும் அவரது குடும்பத்தினரும்  14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையரின் திடீர் அறிவிப்பு, மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுக்கொன்றாக சொல்லி  அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகும் நேரத்தில் சென்னையில் வீடுதோறும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரிசோதனைக்குச் சென்றாலே சோதனை செய்து கொள்பவரும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அதில் கூறியிருக்கிறார். இதுவரை பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே இத்தகைய முறையில் தனிமைப்படுத்தி வந்தனர். தற்போதைய அறிவிப்பின் படி சோதனையில் நோய் இல்லை (“NEGATIVE”) என்று வந்தாலும் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் சொல்கிறாரா? இதைக் கேட்ட பிறகு நோய் இருக்கலாமோ எனச் சந்தேகப்படுபவர்கள் கூட தாங்களாக சென்று எப்படி சோதனை செய்துகொள்வார்கள்? அரசின் வசம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் (PCR KIT) குறைவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வரும் நிலையில், பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியா இது ? என்று மக்களிடம் சந்தேகம் எழுகிறது.

முதலமைச்சர், சுகாதார அமைச்சர், முதலமைச்சரின் சிறப்பு அங்கீகாரம் பெற்ற ‘தினசரி பேட்டி’ அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், கொரோனா சிறப்பு அதிகாரி, கொரோனா சிறப்பு ஒருங்கிணைப்பாளர், சிறப்புக் கண்காணிப்பு செய்ய தனித்தனியாக அமைச்சர்கள் , மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இவர்களோடு சேர்த்து மாநகராட்சி ஆணையர் –  என இத்தனை பேரும் கொரோனா தடுப்புப் பணிகளைப் பற்றி ஆளுக்கொன்றாக பேசியும், செயல்பட்டும், அவரவர் இஷ்டப்படி அறிவிப்புகளை வெளியிட்டும் கொரோனாவை விட மோசமாக மக்களை இம்சித்து வருகிறார்கள். தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பது  போல் மக்களின் உயிரை வைத்து நாள் தோறும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திறமையும் அனுபவமும் வாய்ந்த அமைச்சர் அல்லது அதிகாரி தலைமையில், துடிப்பான அதிகாரிகள் குழுவினர் ஒற்றை உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டால்தானே மிக மோசமான பேரிடரை எதிர்கொள்ள முடியும்.

இந்த அடிப்படை கூட புரியாமல்  ‘அவருக்கு நெருக்கமானவர், இவருக்கு வேண்டப்பட்டவர்’  என  மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும்  தனித்தனி ஆவர்த்தனங்கள் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதைவிட முக்கியமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில்  ஒரே இடத்தில் இருந்து மட்டுமே மக்களுக்கான அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை.