கொரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடா – டிடிவி தினகரன்!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, ஜூன் 19

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு முடக்கம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு வழங்கப்படும் ஜிங்க் (ZINC), வைட்டமின் சி (VITAMIN C) உள்ளிட்ட மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன.

மேலும் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் சாப்பிட வேண்டிய வைட்டமின் சி (VITAMIN C), ஜிங்க் (ZINC) போன்ற மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. குறிப்பாக முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள சென்னையில் இந்த மாத்திரைகள் கிடைக்கவில்லை என்ற புகார் அதிகம் எழுந்துள்ளது. இன்னும் சில இடங்களில் காலாவதியான மாத்திரைகள் அரசு சார்பில் வழங்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

‘பொது இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பதால் பலன் ஏதுமில்லை’ என்று உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்ட பிறகும், விழுந்து விழுந்து மருந்து தெளிக்கும் இந்த ஆட்சியாளர்கள், தேவையான மாத்திரைகளைப் போதுமான அளவுக்கு வாங்காமல் அலட்சியம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. மேலும் அடுத்தடுத்த நாட்களில் பாதிப்பு பெரிய அளவுக்கு இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியைப் போன்று ரயில்பெட்டிகளைத் தயார் செய்யும் பணியிலும் பழனிசாமி அரசு அக்கறை காட்டவில்லை என்று செய்திகள் வருகின்றன. இது குறித்த முறைப்படியான கோரிக்கை தமிழக அரசு சார்பில் ரயில்வே துறையிடம் வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ, பேரிடரை முழுமையாக எதிர்கொள்வதற்கான செயல்திட்டமோ இல்லாமல் கண்களைக் கட்டி காட்டில் விட்டதைப் போல ஆட்சியாளர்கள் தத்தளிப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது. எனவே, முழு முடக்கத்தைத் தாண்டி மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்து இனியாவது பழனிசாமி அரசு செயல்படுமா ? என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை.