சசிகலா எப்போது டிஸ்சார்ஜ்? :மருத்துவர் விளக்கம் !

Filed under: அரசியல்,தமிழகம் |

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால்சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் அங்கிருந்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

அத்துடன் நுரையீரலில் தொற்றின் அளவு அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதை தொடர்ந்து வெளியான மருத்தவ அறிக்கையில் சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டது. அதே சமயம் நேற்றிரவு வெளியான மருத்துவ அறிக்கையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சசிகலா நலமாக இருக்கிறார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கான கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. சசிகலாவின் உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 7அல்லது 10 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றார்.