கோவை, ஏப்ரல் - 29
வே. மாரீஸ்வரன்
கோவை மாவட்ட மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த நான்கு நாட்களில் ஒருவர் கூட தொற்று பாதிப்பு என்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 141 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதியாக காவல்துறையினர் 6 பேருக்கு கடந்த 24ம் தேதி வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக போலீசாருக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இருந்தாலும், கடந்த 4 நாட்களில் புதியதாக எவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
கோவை மாவட்டத்தில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதில் தற்போது, 21 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ள அனைவரும் குணமடைந்து வீடு களுக்கு திரும்பியுள்ளனர். திருப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 112 பேரில் தற்போது 81 பேர் குணமாகி உள்ளனர். மீதமுள்ள 31 பேர் கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நீலகிரியில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் குணமாகி உள்ள நிலையில் நீலகிரியில் கடந்த 17 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்கள் யாருக்கும் பரவவில்லை.
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் கோவையிலிருந்து கடந்த நான்கு நாட்களில் 631 பேருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று ஒருவருக்கும் உறுதிசெய்யப்படவில்லை. புதிய கொரோனா வைரஸ் பாதிப்புடன் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படவில்லை. இதுவரை, 4360 பேருக்கு வைரஸ் பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. அதில் 141 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. தற்போது 21 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 4,756 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி இருந்தோம். இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட அவகாசம் முடிந்து கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கோவையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்றார்.