திருச்சி மாவட்டத்தில் 1, 93, 963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

Filed under: தமிழகம் |

திருச்சி மாவட்டத்தில் 1, 93, 963 குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தகவல்.

போலியோ என்றழைக்கப்படும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசு கடந்த பல ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு மார்ச் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் நிகழ்வில் பேசுகையில், அரசு அறிவுரைப்படி திருச்சி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு (முதலாவது) முகாம் காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. இன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், அனைத்து ஊரக மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், இரண்டு சொட்டுகள் போலியோ சொட்டு மருந்து வாய்வழியாக வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் கடந்த 27.03.2014 தேதியில் வழங்கிய சான்றில் போலியோ நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அண்டை நாடுகளில் போலியோ நோயின் தாக்கம் இருப்பதால் தொடர்ந்து இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

திருச்சியில் ஸ்ரீரங்கம், குணசீலம்,சமயபுரம், வயலூர் ஆகிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம்,முக்கொம்பு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் அவர்களுக்கு 63 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களில் மார்ச் 3 முதல் 5 ஆம் தேதி வரை பயணிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் கிராமப்புறங்களில் 1,26,969 குழந்தைகளுக்கும், நகர்புறங்களில் 66,994 குழந்தைகளுக்கும்,இடம் விட்டு இடம் பெயர்ந்துள்ள 91 குழந்தைகள் மற்றும் அகதிகள் முகாமில் உள்ள 81 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம்; 1,93,963 குழந்தைகளுக்கு 1,695 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊரக பகுதிகளில் 102 சதவிகிதமும், நகர்ப்புறங்களில் 101.8 சதவிகிதமும் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட 100 சதவிகிதத்துக்கும் மேலாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர், மற்றும் திருச்சி சமயபுரம், கம்பரசம்பேட்டை ஆகிய ஊர்களில் நடைபெற்ற திருவிழாக்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில்; துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணியன்; சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.