சீமானின் வலியுறுத்தல்!

Filed under: அரசியல் |

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க முறையான சட்டம் தேவையென வலியுறுத்தி உள்ளார்.

தனியார் பள்ளியில் படித்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரைப் போன்றவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு. கணவனின் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த காமராஜின் மனைவியான பள்ளித் தாளாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்; அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சீமானின் அறிக்கையில், “தனியார் பள்ளியில் 4 வயது பெண் குழந்தை அரசுப் பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிற இன்றைய கொடும் நிலை கண்டு வெட்கி தலைகுனிகிறேன். ரிதினும் அரிதான வழக்குகளில் வழங்கப்படும் மரணத் தண்டனையை பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கான தண்டனையாக வரையறுத்து, அதற்கென தனிச்சட்டமியற்றி, தண்டனைகளைக் கடுமையாக்குவதே இக்குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான ஒரே வாய்ப்பாகும். இக்குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியரான காமராஜை நிரந்தரப் பணி நீக்கம் செய்து, கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தகுந்த மருத்துவச் சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் அளித்து, மீண்டு வர அரசு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.