செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!

Filed under: அரசியல்,தமிழகம் |

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

செந்தில்பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அவர் வேலை வாங்கி தருவதாக பெற்ற பணத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் என 3 ஆயிரம் பக்கத்திலான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மனு தொடர்பாக ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.