மக்கள் விரோத – ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது.
நாடு முழுவதும் 19 கட்சிகளின் சார்பில், வரும் செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை, பல்வேறு போராட்டங்கள் நடைபெற உள்ளது.
இதில், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும், கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்துச் செய்து குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிச் செய்ய வேண்டும், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, ஒன்றிய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவளிப்பதோடு, கண்டனப் போராட்டத்தில் பங்கேற்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோன்று, வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரித்து, போராட்டத்தில் பங்கேற்க உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.