டாக்காவில் இருந்து வந்த ‘வந்தே பாரத் மிஷன்’ விமானம் சென்னையில் தரை இறங்கியது!

Filed under: இந்தியா,உலகம்,சென்னை |

சென்னை,மே 15

ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AI 1244  விமானம் டாக்காவிலிருந்து வந்து, வியாழனன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் சுமுகமாக வெளியேற சென்னை சுங்கத்துறை ஏற்பாடு செய்தது. 157 பயணிகளுடன் வந்த இந்த விமானம் மதியம் ஒரு மணிக்குத் தரையிறங்கியது. வந்தே பாரத் மிஷன் மூலம் சென்னைக்கு வந்தடைந்த ஏழாவது மீட்பு விமானமாகும் இது.

இந்த மீட்பு விமானத்தில் மூலம் வந்த 157 பயணிகளில் 121 பேர் ஆண்கள் 36 பேர் பெண்கள். கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி அனைத்து பயணிகளும் சுமுகமாக வெளியேற சென்னை விமான நிலைய சுங்கத்துறை வசதி செய்து கொடுத்திருந்தது.

கோவிட்-19 பெருந்தொற்று நிலைமை காரணமாக 22 மார்ச் 2020 முதல் இந்தியாவிற்கு வரும் மற்றும் இந்தியாவிலிருந்து புறப்படும் அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

கோவிட்-19 காரணமாக பல்வேறு வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியக் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றி, இந்தியாவுக்கு அழைத்து வரும் பணி  2020  மே மாதம் ஏழாம் தேதி முதல் மே மாதம் 13 வரை வந்தே பாரத் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 11 விமானங்கள் சென்னை வந்தடைய உள்ளன.