டெலிவரி சேவையில் ‘டிரோன்’: சென்னை நிறுவனத்துடன் கைகோர்த்த ‘ஸ்விக்கி’

சென்னை, மே 3:
மளிகைப் பொருள் டெலிவரி சேவைகளுக்கு, டிரோன்களை ஸ்விக்கி நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இதற்காக, சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

நம் நாட்டில், ஆன்லைனின் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் மற்றும் மளிகைப் பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவையை, ஸ்விக்கி நிறுவனம் வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலங்களில், இந்த நிறுவனத்தின் டெலிவரி சேவைகளை, அதிக அளவிலான மக்கள் பயன்படுத்த துவங்கினர்.

இந்த சேவையின்கீழ், இருசக்கர வாகனங்களில், ஸ்விக்கி ஊழியர்கள் உணவுகளையும், மளிகைப் பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த டெலிவரி சேவைக்கு, டிரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய வகை விமானங்களைப் பயன்படுத்த, ஸ்விக்கி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, நான்கு டிரோன் தயாரிப்பு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், சென்னையை தலைமையிடமாக வைத்து இயங்கும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் டிரோன்களை வைத்து, முதற்கட்டமாக டில்லியிலும், கர்நாடக தலைநகர் பெங்களூரிலும் மளிகைப் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து கருடா எரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், “கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் ஸ்விக்கி இடையிலான இந்த புதிய கூட்டணி, டிரோன் டெலிவரிகளின் புதிய சகாப்தத்தின் துவக்கமாக அமைந்துள்ளது” என கூறினார்.