தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

Filed under: தமிழகம் |

அரசு தேர்வு துறை இயக்ககம் தனியார் பள்ளி நிர்வாகம் தங்களது பள்ளி ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு அனுப்பாவிட்டால் அந்த பள்ளிகளின் முடிவுகள் வெளியிடப்படாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்துள்ளது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த விடைத்தாள்களை பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களை திருத்தி வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதற்கு அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள உத்தரவில், “10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில், தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை தேவையான எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளிகளுடைய முடிவுகள் வெளியிடப்படாது எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.