தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு அழைப்பு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு அழைப்பு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

தமிழகத்தில் முதலீடு செய்ய வர சொல்லி 9 வானூர்தி நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பரவலால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை வேறு இடங்களுக்கு மாற்றி வருகின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்களை தமிழ்நாட்டுக்குள் அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இது சம்மந்தமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அண்மையில் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டைக் கருதுவதை எடுத்துக்காட்டுகிறது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது, யுனைடெட் டெக்னாலஜி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கிரிகோரி ஜே ஹேயஸ், ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லாரன்ஸ் கல்ப், போயிங் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் தவே கல்ஹவுன், லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மரிலின் ஹீவ்சன், சாப்ரான் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் பிலிப் பெட்டிட்கோலின், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் வாரன் ஈஸ்ட், ஏர்பஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கைலம் பவுரி, லியானார்டோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் அலெசாண்ட்ரோ புரபியுமோ மற்றும் ஹனிவெல் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டேரிபஸ் ஆடம்சைக் ஆகிய ஒன்பது முன்னணி வானூர்தி நிறுவனங்களின் தலைவர்களைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.