தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன்  தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் 19 பேர் கொண்ட குழு, அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்து பரவுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களின் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

இதனையடுத்து நாளை (11/04/2020) மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவு குறித்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.