தமிழ்நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: பிரதமர் மோடி !

Filed under: இந்தியா,தமிழகம் |

1111புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. ரூ.8,500 கோடி அளவுக்கு வெள்ளச்சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறி, மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதை ஏற்று மத்திய அரசு, உடனடி நிவாரணமாக ரூ.940 கோடியை வழங்கியது.

மேலும், வெள்ளச்சேதங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பதற்காக மத்திய உள்துறை இணைச்செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று அகில இந்திய வானொலி மூலம் ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’ (‘மன்கிபாத்’) நிகழ்ச்சியின் வழியாக உரை ஆற்றினார். அப்போது, ”உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருந்து இயற்கை பேரிடர்கள் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுபோன்ற துயர நிகழ்வுகளை இதற்கு முன்பு நாம் கேள்விப்பட்டதும் இல்லை. கற்பனை செய்ததும் இல்லை. பருவநிலை துரித கதியில் மாறி வருவதன் தாக்கத்தை நாம் அனுபவித்து வருகிறோம்.

நமது நாட்டைப் பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவர்களுக்கெல்லாம் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் வெள்ளச்சேதத்தில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. மாநில அரசுடன் மத்திய அரசு தோளோடு தோள் நின்று பணியாற்றி வருகிறது.

மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தமிழகம் விரைவில் முழுமையாக மீளும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் பிற மாநிலங்களிலும் எதிர்பாராத கனமழையால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட இடங்களில் எப்போதும் இல்லாத வகையில் வெப்பம் அதிகரித்து பயிர்கள் கருகிவிடும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளால் இப்போது உலகமே கவலையடைந்து வருகிறது. உலகின் வெப்பநிலை இதற்கு மேலும் அதிகரிக்கக் கூடாது. அதற்கு நாம் ஒவ்வொரு வரும் நமது பங்கைச் செலுத்த வேண்டும். பெட்ரோல், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட சக்திகளை மக்கள் சிக்கனமாகவும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும். சூரிய சக்தி சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். இதற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த நூர்ஜஹான் என்ற பெண், சூரிய சக்தியில் எரியும் விளக்குகளைத் தயாரித்து வருகிறார். இத்தனைக்கும் அவர் பெரிய அளவில் கல்வி பயிலாதவர். அவர் மூலம் 500 வீடுகள் குறைந்த செலவில் விளக்கொளி பெற்றுள்ளன. அவரது பணி என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இதேபோல, ஒவ்வொருவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்க தங்களது பங்களிப்பை ஆற்ற வேண்டும்.

நாட்டின் ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தும் வகையில் “ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ திட்டத்தை நான் பரிந்துரைக்கிறேன். இது தொடர்பான தங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ‘மைகவ்.காம்’ இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இத்திட்டம் எப்படி இருக்க வேண்டும்? எப்படி மக்கள் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்? என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கலாம். இது மிகவும் சிறப்பான திட்டம். எனவே பொதுமக்கள் இந்தியர்களை ஒருங்கிணைக்க தங்கள் புத்தாக்கத்திறனை பரிந்துரையாக அளிக்க வேண்டும்” என்றார்.