திண்டுக்கல் சீனிவாசன் வெளிப்படையாக தன் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான் என்று கூறியுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவரை அதிமுக ஒற்றை தலைமையில் செயல்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு சசிகலா அந்த பதவியை ஏற்றாலும் பின்னர் அவர் சிறை சென்றார். அதன்பின் கட்சிக்கு பொதுச்செயலாளர் இல்லாமல் ஈபிஎஸ் & ஓபிஎஸ் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பேசிய அதிமுக ஜெயக்குமார், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என வலியுறுத்திந்தார். இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவை ஒற்றை தலைமையில் இணைப்பது என்றால் எடப்பாடி பழனிசாமிக்கே தனது ஆதரவு என கூறியுள்ளார். இதனால் விரைவில் மற்ற அதிமுக பிரமுகர்களும் தங்கள் ஆதரவு நிலையை குறித்து பேசுவார்கள் என்று கட்சி வட்டாரத்தினர் எதிர்பார்க்கின்றனர்.