திருச்சி நாகமங்கலத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Filed under: தமிழகம் |

தேசிய ஊட்டச்சத்து மாதம், சுதந்திர இந்தியாவின் வைரவிழா, கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, திருச்சிராப்பள்ளியில் உள்ள நாகமங்கலம் சமுதாய அரங்கில், திருச்சி களவிளம்பரத்துறை அலுவலகம் நடத்தியது. 

மணிகண்டம் பஞ்சாயத்துத் தலைவர் கமலம் கருப்பையா இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.  நாகமங்கலம் பஞ்சாயத்து தலைவர் வெள்ளைச்சாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

திருச்சி களவிளம்பரத்துறை அதிகாரி தேவி பத்மநாபன், துவக்க உரையாற்றினார்.  ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் கூறினார்.  ஊட்டச்சத்துத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது என்றும், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே  ஊட்டச்சத்து அளவை அதிகரிப்பது தான் இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம் என அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஊட்டச்சத்து மாதம் நான்கு விதமான கருப்பொருள்களில் நடத்தப்படுகிறது.  செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை, ஊட்டச்சத்துத் தோட்டம் அமைக்கும் பணியாகவும், செப்டம்பர் 8ஆம் தேதி முதல்  15ஆம் தேதி வரை, ஊட்டச்சத்துக்கான யோகா மற்றும் ஆயுஷ், செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை, அங்கன்வாடிப் பயனாளிகளுக்கு  ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்குதல், செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்குதல் போன்ற நான்கு நிகழ்ச்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  முதல் வாரத்தில் ஊட்டச்சத்துப் பழங்களின் மரக்கன்றுகள், உள்ளூர்க் காய்கறிகள் மற்றும் மூலிகைச் செடிகள் நடப்பட்டன. குழந்தைகளின் உயரம் மற்றும் எடையை அளவிடும் நிகழ்ச்சியும் இந்த மாதம் நடத்தப்படுகிறது.  திருச்சி முத்தரசநல்லூர், பெரம்பலூர் செட்டிகுளம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட பின் 3வது ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சி நாகமங்கலத்தில் நடத்தப்படுவதாக திரு கே. தேவி பத்மநாபன் கூறினார். 

மணிகண்டம், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் (ஐசிடிஎஸ் )துறையின், குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி கவுசல்யா சிறப்புரையாற்றினார்.  தினை போன்ற பாரம்பரிய உணவுகள் எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து அவர் பேசினார்.

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர் அனுசுயா வலியுறுத்தினார்.

மணிகண்டம் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

களவிளம்பர உதவியாளர் ரவீந்திரன் வரவேற்புரையாற்றினார். மணிகண்டம் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், நாகமங்கலம் பஞ்சாயத்து செயலாளர் மூர்த்தி ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.

அபிநய கலை மன்றக் குழுவினர் ஊட்டச்சத்து, தூய்மை, சுதந்திரப் போராட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நடத்தினர்.  ஆரோக்கியமான குழந்தைகளின் தாய்மார்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  ஊட்டச்சத்து, பழங்கள், காய்கறிகள் குறித்த கண்காட்சியை ஐசிடிஎஸ் நடத்தியது.

நாகமங்கலத்தில் ஊட்டச்சத்து விழா மற்றும் சுதந்திர இந்தியாவின் வைர விழாவின், பிரச்சார வாகனம் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. எல்.இ.டி. திரையுடன் கூடிய இந்த வாகனம், ஊட்டச்சத்து மாதம், சுதந்திரப் போராட்டம் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு குறித்த படக்காட்சிகளை, திருச்சி மணிகண்டம் வட்டாரத்தில் காட்டும்.