தேனி அருகே தாய்/மகள் இருவர் இறப்புக்கு காரணமானவர் கைது!

Filed under: தமிழகம் |

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் வருசநாடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட சின்னசாந்திபுரம் மலை கிராமத்தை சேர்ந்த மொக்கை என்பவர், தனது மகள் ஆண்டிச்சியம்மாள், தனது பேத்தி காவியா இறப்பிற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்றுமுன்தினம் வருசநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மகள் ஆண்டிச்சியம்மாள் கீழபூசணூத்து கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் ( 29) என்பவரிடம் குடும்ப தேவைக்காக கடன் வாங்கினார். அந்த கடனுக்காக அடைக்கலம் நடத்தி வந்த பால் பண்ணையில் தினந்தோறும் பால் ஊற்றி கடனை கழித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் தொகை முழுவதுமாக அடைக்கப்பட்டது.

அதன் பின்பு பால் ஊற்றியதற்காக ஆண்டுச்சியம்மாள், அடைக்கலத்திடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அடைக்கலம், ஊற்றிய பால், வட்டி தொகைக்கு கூட சரியாக இல்லை.
எனவே வட்டியுடன் சேர்த்து 5½ லட்சம் ரூபாய் உடனடியாக செலுத்துமாறும் இல்லையென்றால் நிலத்தை எழுதி கொடுக்குமாறு ஆண்டிச்சியம்மாளிடம் தெரிவித்தார். தொடர்ந்து கடன் தொகை கேட்டு நெருக்கடி அளித்ததால் ஆண்டிச்சியம்மாள் அவருக்கு சொந்தமான நிலத்தை அடைக்கலத்திற்கு எழுதி கொடுத்தார். இந்த சம்பவத்தால் மனம் வெறுத்த ஆண்டிச்சியம்மாள் கடந்த 27 ஆம் தேதி அன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, அவரும் விஷம் குடித்தார். இதில் எனது மகள் ஆண்டிச்சியம்மாளும், எனது பேத்தி காவியாவும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். எனது பேரன் மட்டும் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இந்த நிலையில் ஆண்டிச்சியம்மாள் பெற்ற கடனுக்காக, அவர் நடத்தி வந்த பால் பண்ணையை தனக்கு எழுதி கொடுக்குமாறும், இல்லையென்றால் வட்டியுடன் சேர்த்து 5½ லட்சம் ரூபாயை உடனடியாக கொடுக்குமாறு கூறி தற்போது என்னை, அடைக்கலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே அடைக்கலம் தூண்டுதல் பேரில் எனது மகளும் எனது பேத்தியும் இறந்து விட்டார்கள். தற்போது தன்னையும், கடன் தொகையை செலுத்தா விட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார் எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வருசநாடு போலீசார் சார்பில் வழக்கு பதிவு செய்து அடைக்கலம் என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.