பரிதவித்த விவசாயிகளும் கைகொடுத்த தோட்டக்கலைத் துறை!

Filed under: சென்னை,தமிழகம் |

கடலூர்,மே 02

முக்கனிகளில் முதன்மையானது பலாப்பழம். அளவில் பெரியது மட்டுமல்ல, சுவையிலும் அருமையானது. நமது வரலாற்றில் பலாப்பழத்திற்கு எப்போதும் தனித்த இடம் இருந்தே வந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் பலாமரமும் பலாப்பழமும் பல பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு எனப் பல சங்கத்தொகைப் பாடல்களில் பலாப்பழம் இடம் பெற்றுள்ளது.  “சிறுகோட்டுப் பெரும்பழம்” என்று கபிலர் குறுந்தொகையில் வியந்து குறிப்பிடுகிறார். சிறு காம்பில் மிகப்பெரிய பழம் முறியாமல் தொங்கிக் கொண்டிருப்பது அதிசயம்தான்.

ஜான்

தமிழ்நாட்டில் பலாப்பழ விளைச்சலில் முதலிடத்தில் இருப்பது கடலூர் மாவட்டம்தான். அதிலும் பண்ருட்டி பலாப்பழம் என்றால் தனிமதிப்புதான். 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2876 ஹெக்டேரில் 78104 மெட்ரிக்டன் பலாப்பழம் விளைந்தது. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 714 ஹெக்டேரில் 21290 மெட்ரிக் டன் பலாப்பழம் விளைந்தது. கடலூர் தவிர கன்னியாகுமரி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் அதிக அளவில் பலாப்பழம் விளைகின்றது.

இந்த வருடமும் (2019-20) கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், விருத்தாசலம் ஆகிய வட்டாரங்களில் 700 ஹெக்டேர் பரப்பிற்கும் அதிகமாக பலா மரங்கள் தனித் தோப்புகளாகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. பலா விளைச்சலும் நன்றாகவே இருந்தது. இதனால் மகிழ வேண்டிய விவசாயிகள் மலைத்து நின்றார்கள், பரிதவித்துப் போனார்கள்  காரணம், திடீரென அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்குதான். புழு, பூச்சிகளோடு மன்றாடி பயிர் செய்யும் விவசாயிகள் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி கொரோனா வைரஸால் வாடி வதங்கும் நிலைக்கு ஆளானார்கள். பழுத்த பலாபழங்களை அறுத்து விற்பனைக்கு வேறு இடங்களுக்கு எடுத்து செல்ல முடியாத நிலைமை கொரோனாவால் ஏற்பட்டது. பழங்கள் பறிக்க ஆள் இல்லாமல் மரத்திலேயே பழுத்து அழுக ஆரம்பித்தன.

விருத்தாசலம் வட்டம் நறுமணம் கிராமத்தின் விவசாயி ஜான் பாஸ்கோ தனக்கு 50 பலா மரங்கள் இருந்ததாகவும் கொரோனாவால் எங்கே அழுகிய பழங்களை குப்பையில் கொட்டுவதற்கு ஆளும் பணமும் செலவழிக்க வேண்டுமோ என்று பயந்து கொண்டு இருந்தேன் என்கிறார்.

பலாப்பழத்தால் விவசாயிகள் அடையும் வேதனையை உணர்ந்த மாவட்ட நிர்வாகமும் தோட்டக்கலைத் துறையும் உடனடியாகத் தீர்வு காண முயன்றன. முறையான அனுமதியின் பேரில் தோட்டக்கலைத் துறைப் பணியாளர்கள் பலாப்பழ விவசாயிகளை நேரில் சந்தித்து தரமான பழங்களைக் கொள்முதல் செய்தனர்.  முதல் கட்டமாக கடலூர் நகராட்சியில் ஊரடங்கால் மக்களுக்கு அவர்கள் இருக்கும் பகுதிலேயே காய்கறிகள் தொகுப்பாக வழங்கப்பட்ட போது பலாப்பழங்களும் விற்கப்பட்டன. சில சமயங்களில் முன்னணி பணியாளர்களுக்கு இலவசமாகவும் தரப்பட்டன.  இவ்வாறு 11.50 மெட்ரிக் டன் பலாப்பழம் விநியோகிக்கப்பட்டது.

சிலம்பரசன்

பிறகு மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பால் விளைந்த பலாப்பழங்களை உள்மாவட்டத்திலும் வெளிமாவட்டத்திலும் வெளிமாநிலங்களிலும் விற்பதற்கும் வழி ஏற்பட்டது.  இதற்காக 159 வாகனங்களுக்கு பலாப்பழங்களை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை உள்மாவட்டத்தில் 85 மெட்ரிக் டன்னும் வெளிமாவட்டங்கள் / மாநிலங்களில் 606 மெட்ரிக் டன்னும் விற்பனைக்காக  பலாப்பழங்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளன. நல்லூர் வட்டம் பெரியனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் பலாப்பழம் வாங்க நாங்கள் நெய்வேலி, பண்ருட்டிக்குதான் போக வேண்டும். இந்தக் கொரோனா காலத்தில் இங்கேயே வந்து தோட்டக்கலைத் துறையினர் பலாப்பழம் விற்பது ஆச்சரியமாக உள்ளது. அவர்களுக்கு நன்றி என்கிறார்.

நல்லூர் ராஜா என்ற வியாபாரி உழவன் நண்பன் என்ற  திட்டத்தால் தோட்டக்கலைத் துறை மூலம் பலாப்பழம் வாங்கி விற்கிறேன். நல்ல லாபம் கிடைக்கிறது என்கிறார்.

இதுமட்டும் அல்லாமல் தோட்டக்கலைத் துறையின் இ-தோட்டம் என்ற இணைய வழியிலான விற்பனையிலும் பலாப்பழம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இ-தோட்டம் மூலம் விற்பதற்காக 4.5 டன் பலாப்பழம் பண்ருட்டியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

மத்திய அரசும் மாநில அரசும் ஊரடங்கில் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகப் பல நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு சாட்சியாக பலாப்பழம் உள்ளது. ஊரடங்கின் தொடக்க காலத்தில் வர்த்தகர், பயணிகள் என யாரும் இல்லாததால் பலாப்பழ விற்பனையே இல்லை. தோட்டக்கலைத் துறையினர் களத்தில் இறங்கிய போது ஒரு பழம் ரூபாய் 50 என கொள்முதல் செய்தனர். நஷ்டம் அடையாமல் இருந்தால் போதும் என விவசாயிகள் அப்போது நினைத்தனர்.  ஆனால் இப்போது ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.125 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. நம்ப முடியாத ஆச்சரியத்தில் பலாப்பழ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பலாப்பழம் தங்களைப் பாதாளத்தில் தள்ளிவிடும் என்று பயந்திருந்த விவசாயிகள் இப்போது பலன் அடைந்து பெருமிதமாக நிற்கின்றனர். தோட்டக்கலைத் துறை சூழலுக்குத் தகுந்தவாறு சிறப்பாகச் செயல்பட்டதற்காக விவசாயிகள் அத்துறை அலுவலர்களைப் பாராட்டி மகிழ்கின்றனர்.

பலாப்பழமும் பரிமாறப்படுகிறது, விவசாயிகளின் மனமும் குளிர்ந்துள்ளது. விருத்தாசலம் ஒன்றியம் பெரியகண்டியாங்குப்பம் பலா விவசாயி வெங்கடேசனின் கூறுகையில், நாங்க தலை தலைமுறையா பலாப்பழம் விளைவிக்கிறோம்  இந்த வருஷம் கொரோனா வந்ததாலும் தடை உத்தரவு போட்டதாலும் பலா என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டு இருந்தோம். அப்பதான் கடலூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் வந்து பழம் கொள்முதலுக்குக் கேட்டனர். பிறகு அவர்கள் அனுமதியுடன் வியாபாரிகள் வந்தனர். இப்போது பழம் விற்று எனக்கு நல்ல லாபமும் கிடைத்தது  தோட்டக்கலைத் துறைக்கு நன்றி என கூறி பெருமிதப்பட்டார்.