பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் நெஞ்சுவலி

Filed under: விளையாட்டு |

இஸ்லாமாபாத், செப் 28:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக், 51, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். அவர் 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,701 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,829 ரன்களை அவர் குவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பேட்டிங் ஆலோசகர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பாகிஸ்தான் அணிக்காக பணியாற்றினார்.

இந்த நிலையில் இன்சமாம் உல் ஹக்கிற்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.