பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்!

Filed under: அரசியல்,இந்தியா |

முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் மே மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. முக்கிய பிரமுகர் கட்சியை விட்டு விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் நடப்பு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் கேட்டு வந்தார். பாஜக வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லாதது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காவிட்டால் கட்சியை விட்டு விலகுவதாக பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். தற்போது பாஜகவை விட்டு விலகுவதாகவும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் விலகுவதால் அவரது ஆதரவாளர்களும் கட்சியை விட்டு விலகக்கூடும் என்றும் இதனால் தேர்தலில் பாஜக வாக்குகள் குறையும் அபாயம் உள்ளது என்று பேசப்படுகிறது.