பாடும் நிலா எஸ்.பி.பி.,யின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று!

Filed under: சினிமா |

சென்னை, செப் 25:

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ் திரைத்துறையில், பாடும் நிலா என அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்பட்டவராக, அவர்களின் அன்பு மழையில் நனைந்து வந்தார்.

1966ல் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான எஸ்.பி.பி, முதல் பாடலாக ஓட்டல் ரம்பா படத்தில் அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை. பின், 1966ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சாந்தி நிலையம் படத்தில் இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார்.

எஸ்.ஜானகியோடு முதல் பாடலாக கன்னிப்பெண் படத்தில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் என்ற முதல் பாடலை பாடத்தொடங்கி அவருடன் அதிக பாடலை பாடியவர் எஸ்.பி.பி. சங்கராபரனம் படத்திற்காக முதல் தேசிய விருதைப் பெற்ற எஸ்.பி.பி. தொடர்ந்து பல விருதுகளை வாங்கிக் குவித்தார்.

இந்தியாவின் பதினாறு மொழிகளிலும், 40,000 பாடல்களுக்குமேல் பாடி, கின்னஸ் சாதனைப் படைத்தவர் எஸ்.பி.பி. ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு, இவர் பாடல்களை பாடி உள்ளார்.

இப்படி இசைத் துறையில் சிகரத்தில் இருந்த எஸ்.பி.பி, கடந்த ஆண்டு, கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டபோதும் கடைசியாக கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு பாடலைப் பாடியது நினைவுகூரத்தக்கது.

கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 25ம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பி. சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் பாடும் நிலவாக ரசிகர்களை தன் பாடல் மூலம் காலம் முழுவதும் சந்தோஷப்படுத்திக்கொண்டிருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எஸ்.பி.பி.யின் நினைவு தினமான இன்று, சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு, அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.