பெங்களூர்: பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.
பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்து உள்ளது. அங்கு நித்யானந்தா சாமியார் தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்ற பெண் பெங்களூர் பிடதி காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்தார்.
அந்த வழக்கு சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டு ராமநகர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நித்யானந்தாவுக்கு பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 5½ மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், நித்யானந்தா இணையதள தொலைக்காட்சியில் தினமும் சொற்பொழிவாற்றும் நித்யானந்தா, நேற்று தனது ஆன்மிக சொற்பொழிவை தொடங்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார்.
அந்த அறிவிப்பை தொடர்ந்து நித்யானந்தா பேசுகையில், ”பிடுதி தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். ஒட்டுமொத்தமாக அனைத்தும் இங்கிருந்து மாற்றப்படுகிறது. தினமும் நடைபெறும் பூஜைகள் உள்பட அனைத்தும் திருவண்ணாமலையிலேயே நடைபெறும். இந்த பிடுதி தியான பீடம் தொடர்ந்து செயல்படும். இனிமேல் நான் வழக்கு சம்பந்தமான விஷயங்களுக்காக மட்டுமே பெங்களூர் வருவேன்” என்றார்.