பிரபாகரனை இழிவு படுத்திய இயக்குனர், நடிகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – வ.கௌதமன்

Filed under: சினிமா,சென்னை,தமிழகம் |

சென்னை,  ஏப்ரல் 27

மேதகு பிரபாகரன் அவர்களை இழிவு படுத்திய மலையாள இயக்குனர் அனூப், நடிகர் துல்கர் சல்மான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“வரனே அவஸ்யமுன்ட்” என்கிற மலையாள திரைப்படத்தில் எங்களின் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரை இழிவு படுத்தும் விதமாக நாயினை வைத்து காட்சிப்படுத்தி ஏளனம் செய்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. கலை என்பது சமூகத்தை சீர்திருத்துவதாகவும் சமூக மாற்றத்துக்கு வித்திடுவதாகவும் இருக்க வேண்டும். அதை விடுத்து ஒரு வரலாற்றுக்குரிய தலைவரை அசிங்கப்படுத்துவது எப்படி அறமாகும். சிங்கள அதிகாரவர்க்கம், இந்திய ஒன்றியம் உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளின் துணை கொண்டு தமிழீழத்தை சிதைத்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. ஆனாலும் இலங்கையில் வாழ்கின்ற சிங்கள மக்களில் சிலர் இன்றும் வல்வெட்டித்துறைக்கு வந்து தலைவர் பிரபாகரன் பிறந்த வீட்டினை பார்வையிட்டு, ஒரு மாவீரன் வாழ்ந்த மண் இது என்று கூறி அவரது வீரத்தினை பெருமைப்படுத்தும் வகையில், அவரது நினைவாக ஒரு கைப்பிடி மண்ணை தங்களோடு எடுத்துச் சென்று பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். அவரை எதிர்த்து கடுமையாக போரிட்ட சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட “பிரபாகரனின் ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் இணையானவர்கள் இங்கு எவருமில்லை” என பகிரங்கமாக பேசியிருக்கிறார். எதிரிகள் கூட பெருமைப்படும் எம் இனத்தலைவனை அசிங்கப்படுத்துவது என்பது எம் தாயை இழிவு படுத்துவதற்கு சமமானதாகும்.

கேரள மக்களை என்றும் நாங்கள் வேற்றுமைப்படுத்தியும் பார்க்கவில்லை. புறந்தள்ளியும் வைக்கவில்லை. எங்கள் சகோதர உறவாகத்தான் பழகிக்கொண்டிருக்கிறோம். ஆனால் மலையாள திரைப்படங்களில் சில படைப்புகள் தமிழர்களை கொச்சைப்படுத்தி, கோமாளிகளாக்கி, வில்லன்களாக சித்தரித்து தொடர்ந்து காட்சிப்படுத்திக்கொண்டே வருவது நேர்மையல்ல. யாரோ ஒரு சில படைப்பாளிகள் செய்யும் தவறுகளால் இரண்டு இனங்களுக்குள் கசப்புணர்வை ஏற்படுத்துவது அழகுமல்ல. சமீபத்தில் கேரளாவை வெள்ளம் சூழ்ந்த போது கூட துடிதுடித்து ஓடிச் சென்று உதவியவர்கள் தமிழர்கள். கன்னியாகுமரி கடலோர தமிழ் மீனவர்கள் தான் கட்டுமரங்களையும், படகுகளையும் எடுத்துக்கொண்டு ஓடோடிச் சென்று கேரளத்தின் உயிர்களையும் உறவுகளையும் காப்பாற்றினார்கள். மரியாதைகுரிய கேரள முதல்வர் கூட தமிழகத்தின் “ஃபிஷர்மேன் ஆர்மிதான்” எங்களுக்கு பேருதவி செய்தார்கள் என்று பெருந்தன்மையோடு நன்றி கூறினார். 

வ.கௌதமன்

சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக துல்கர் சல்மானின் அப்பா திரு மம்மூட்டி அவர்கள் உடனடியாக மருத்துவ உதவி செய்ததையும் முல்லை பெரியாறு அணை பிரச்சினை எழுந்தபோது “தமிழகத்திலிருந்து காய்கறிகளோ அசைவ பொருட்களோ வரலைன்னா நம்ம நிலைமை என்னாகுங்கறத யோசிச்சு பேசுங்க” என உரிமையோடு மலையாளிகளை எச்சரித்ததையும் நாங்களும் மறக்கவில்லை. அப்படிப்பட்டவருக்கு மகனாக பிறந்தவர் மட்டுமல்லாமல் துல்கர் சென்னையிலேயே படித்து வாழ்ந்து வளர்ந்தவர். உச்ச நட்சத்திரத்தை தவிர எந்த ஒரு திரைப்படத்தின் கருத்திற்கும் கதாநாயகன் பொறுப்பேற்க இயலாது என்பது எங்களுக்கு தெரியும். இயக்குனர்தான் அதற்கு முழு பொறுப்பென்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், அந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது என்று எங்களை புண்படுத்திய காட்சியினை மட்டும் துல்கர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பது தான் வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. படைப்பாளாளிகளோ, படைப்புக்களோ எல்லை தாண்டலாம் தவறில்லை. ஆனால் தவறான கருத்தியலோ அதன் மூலமாக ஒரு கலவரமோ எல்லை தாண்டினால், நாங்கள் ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டோம்.

மழுப்பலான முறையில் ஏற்கனவே தனது வருத்தத்தை துல்கர் தெரிவித்திருந்தாலும் “வரனே அவஸ்யமுன்ட்” படத்தில் உள்ள எங்களின் உயிருக்கு நிகரான தலைவரை இழிவு படுத்தும் காட்சியை படத்தின் மூலப்பிரதியிலிருந்து உடனடியாக நீக்குவதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட தவறு நேர்ந்ததிற்கும் இனி நேராதிருப்பதற்குமாக இப்படத்தின் இயக்குநர் அனூப், வசனம் பேசி நடித்த சுரேஷ் கோபி மற்றும் இப்படத்தின் நாயகன் துல்கர் சல்மான் என அனைவரும் இணைந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ஒரு கூட்டறிக்கை வெளியிடும்படி தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.