புதுவைப் பல்கலை பேராசிரியருக்கு ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது !

Filed under: இந்தியா,புதுச்சேரி |

புதுவை : வி.எச்.என். செந்திகுமார நாடார் தன்னாட்சி கல்லூரியில் “தாவரத்தின் சமீபத்திய போக்குகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில், புதுவைப் பல்கலைக்கழகத்தின் உயிர் தகவலியல் துறை பேராசிரியர். அ. தினகர ராவுக்கு தாவர அறிவியலில் அவரது பங்களிப்பிற்காக தாவர ஆராய்ச்சிக்கான சங்கத்தின் (SPR) மதிப்புமிக்க ‘புகழ்பெற்ற விஞ்ஞானி’ விருது வழங்கப்பட்டது.

பேராசிரியர் அ.தினகர ராவ் இருபதாண்டுகளுக்கும் மேலாக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் தாவர செயல்பாட்டு மரபியல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், தாவர உடலியல், மருந்து அடையாளம் மற்றும் மேம்பாடு உள்ளிடங்கிய ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுஉள்ளார்.

புற்றுநோய், ஆக்சிஜனேற்றம் அழற்சி, உயர் இரத்த அழுத்தம், அல்சைமர், பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிரான மருந்துகளை அடையாளம் காண முக்கியமான மருத்துவ தாவரங்களின் பைட்டோ கெமிக்கல்களை அடையாளம் காணவும் குணாதிசயப்படுத்தவும் அவரது ஆராய்ச்சி குழு மற்ற தேசிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறார்.

பேராசிரியர் அ. தினகர ராவ்  80க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சரிநிகர் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் வெளியிட்டுள்ளார். அவரது மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்டம் பெற்றுள்ள 6 மாணவர்களும் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி நிலைகளில் சிறந்து விளங்குகின்றனர். மேலும் பல முதுகலை தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மாணவர்கள் ஆராய்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளனர். தற்போது இவரது ஆய்வகத்தில் 5 ஆராய்ச்சி மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆசிரியர் விருதுடன் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் மேலும் தனது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக நிதியளிப்பு நிறுவனங்களான DBT, UGC, DST, ICMR மற்றும் CSIR ஆகியவற்றிலிருந்து பல கூடுதல் மானியங்களையும் பெற்றுள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் குர்மீத் சிங் மற்றும் பல்கலைக்கழக சக ஊழியர்கள், பேராசிரியர் அ. தினகர ராவின், தாவர அறிவியல் துறையில் அவரது சிறந்த பங்களிப்பைப் பாராட்டியும், புகழ்பெற்ற விஞ்ஞானி என்ற மதிப்புமிக்க விருதைப் பெற்றதற்காகவும் வாழ்த்தியுள்ளனர்.