காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

Filed under: இந்தியா |

புதுடெல்லி, அக் 2:
மகாத்மா காந்தியின், 153வது பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர், காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தேச பிதா மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டெல்லியின் ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடத்தில், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நேரில் சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையே, பிரதமர் மோடி டுவிட்டரில், “மகாத்மா காந்தியின் உன்னத கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை. அவை, லட்சக்கணக்கான மக்களுக்கு, உத்வேகத்தையும், மன வலிமையையும் அளிக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.