விளம்பரத்தில் நடித்தது குறித்து வருத்தத்தை தெரிவித்துள்ளார் பிரபலமான துணை நடிகர் லால்.
“சண்டக்கோழி,” “மருதமலை” உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் லால். இவர் சமீபத்தில் வெளியான “கர்ணன்” உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர். சமீபத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் இவர் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோசடி செய்யும் ஆன்லைன் விளையாட்டின் விளம்பரத்தில் லால் நடித்திருப்பது குறித்து பலர் ஆட்சேபணை செய்தனர். இந்த விளம்பரம் குறித்து லால், “கொரோனா ஊரடங்கின்போது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டேன். அதனால்தான் அந்த ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் அதற்காக தற்போது வருந்துகிறேன். இனி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.