முல்லையால் திமுக ஆட்சிக்கு ஆபத்து?

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோவில், மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு, தக்காராக எல்.ஆதிமூலம் அவர்கள் உள்ளார். கோவிலின் துணை ஆணையராகவும், செயல் அலுவலராகவும் முல்லை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கோவிலில் பொறுப்பேற்ற நாள் முதல், கோவில் பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாக கூறப்படுகிறது.

முக்கிய இலாகாவை வைத்திருக்கும் தமிழக அமைச்சர் ஒருவரின் சகோதரருக்கு நெருக்கமானவராக கருதப்படும் முல்லை, சர்வாதிகாரப்போக்கில் செயல்படுவதாக, அவரின் கீழ் பணியாற்றிய பலர் தெரிவித்துள்ளனர். இவர், இதற்கு முன் பணியாற்றிய மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் மற்றும் சிவன்மலை கோவிலின் ஊழியர்கள் பலரும், முல்லை குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்கின்றனர். ஒரு சமயம், ஊழியர் ஒருவரை சாடிய முல்லை, ‘என் பெயரை எழுதிவிட்டு குடும்பத்துடன் செத்துடு’ என, காட்டமாக கூறி உள்ளார். இப்படி பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. இதனால், மனவுளைச்சுலுக்கு ஆளான சிலர், தங்கள் வேதனைகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

தற்போது வடபழனி ஆண்டவர் கோவிலிலும், அவர் அதே போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், யாருக்கும் மரியாதை தராமல், தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதைப் போல் நடந்துகொள்வதாகவும் கூறுகின்றனர். வழக்கமாக நடக்கும் நிகழ்வுகளில் குறுக்கிட்டு, அதில் மாற்றங்களை கொண்டுவர முயற்சிப்பதாகவும், சிலர் தெரிவித்துள்ளனர்.

வைகாசி விசாக பிரம்மோத்சவத்தின் கொடியேற்றம், ( 03-06-2022 ) இன்று காலை 5 முதல் – 6 மணிக்குள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தக்கார் ஆதிமூலம், 5 மணிக்கு முன்பே வந்து அனைத்து பூஜைகளிலும் பங்கேற்றார். எனினும், துணை ஆணையர் முல்லை, 5.30 மணிக்கு மேல் பொறுமையாக வந்தார். கோவிலில் முக்கிய பொறுப்பில் இருந்தும், முன்னதாக வந்து ஏற்பாடுகளை கவனிக்காமல், சிறப்பு விருந்தினரைப் போல், தாமதமாக வந்தது பேசுப்பொருளானது. அவர் வந்து நின்ற சில நிமிடங்களில், கொடி ஏற்றப்பட்டது.

பின், அங்கு இருந்த ஒரு சிறுமி, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த தக்கார் ஆதிமூலம், உடனடியாக அந்த சிறுமிக்கு அருகே சென்று, உதவிகளை செய்தார். எனினும், துணை ஆணையர் முல்லையோ, அதை சிறிதும் பொருட்படுத்தாமல், அங்கிருந்து தன் அலுவலக அறைக்கு சென்று அமர்ந்தார். அந்த சிறுமியின் நிலை குறித்து யாரிடமும் அவர் கேட்டறியவில்லை. இது, அவரின் மனிதாபிமானமற்ற போக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

இதையடுத்து, சென்னை மேயர் பிரியா ராஜன், கோவிலில் ஸ்வாமி வழிபாடு செய்தார். கோவிலுக்கு மேயர் வரும்போது, கோவில் அதிகாரிகள் அவரை முறைப்படி வரவேற்க வேண்டியது மரபாகும். எனினும், அவரை துணை ஆணையர் முல்லை வரவேற்கவில்லை. அலுவலகத்தில் ஏசியில் அமர்ந்தவாறு மொபைல் போனில் உரையாடிக்கொண்டிருந்தார். ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு மேயர் வெளியே வரும்போது தான், முல்லை அங்கு வந்து அவரை சந்தித்தார். இது, அவரின் சர்வாதிகாரத்தனத்தை காட்சிப்படுத்தும் வகையில் இருந்தது.

இதற்கிடையே, வைகாசி விசாக பிரம்மோத்சவத்திற்கு அச்சடிக்கப்பட்ட பத்திரிகையில், ‘வைகாசி விசாகம் விடையாற்றி பெருந்திருவிழா அழைப்பிதழ்’ என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மோத்சவ திருவிழா என குறிப்பிடுவதற்கு பதிலாக, விழா முடிவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை மட்டும் முன்னிலைப்படுத்தும் வகையில், விடையாற்றி பெருந்திருவிழா அழைப்பிதழ் என அச்சிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் இவ்வளவு பெரிய பிழையுடன் அச்சிட்டு, அதை, அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது, துணை ஆணையரின் அலட்சியப்போக்கை காட்டுகிறது.

 

அரசர்கள் ஆண்ட காலகட்டத்தில், கோவில்களில் ஏதேனும் பிழைகள் நேர்ந்தால், அது ஆட்சிபுரியும் அரசர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. அதுபோன்ற பல சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன. இந்நிலையில், துணை ஆணையர் முல்லையால், கொடியேற்ற நிகழ்வின்போது, சிறுமி மயங்கி விழுந்த சம்பவம், அதற்கான அறிகுறியாக அமைந்துள்ளது. இது, தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என பக்தர்கள் கருதுகின்றனர். இதன் விளைவாக, கோவில் பிரம்மோத்சவம் நிறைவடைவதற்குள், அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அல்லது அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் என இருவரில் யாரேனும் ஒருவரின் பதவி பறிபோகவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இப்படி, துணை ஆணையரால் ஏற்பட்ட அடுத்தடுத்த நிகழ்வுகள், அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.