மூன்று வேளை உணவு ரூ.1!

Filed under: தமிழகம் |

ஈரோட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் ராஜலட்சுமி தம்பதியர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு மூன்று வேளையும் உணவை ரூ.1க்கு வழங்கி வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தம்பதியினர் சைவ உணவகம் நடத்தி வருகின்றனர். மதியம் சாப்பாட்டுக்கு ரூ.70ம், மாற்றுத்திறனாளிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் செய்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடனிருந்து கவனித்துக் கொள்பவர்களுக்கு மட்டும் மூன்று வேளையும் ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் இத்தம்பதியினரை மனதார பாராட்டி வருகின்றனர்.

இத்தம்பதியின் தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் “மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் மற்றும்- ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல்! இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!’’ என்று பதிவிட்டுள்ளார்.