யு.ஏ.இ. அணியை 9 விக்கெட்டுகளில் வென்றது இந்தியா !

Filed under: உலகம்,விளையாட்டு |

kohli-rohit_2325944gபெர்த்தில் நடைபெற்ற யு.ஏ.இ. அணிக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

யு.ஏ.இ. டாஸ் வென்று முதலில் பேட் செய்து அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்துவீச்சிற்கு 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பெற்று 6 புள்ளிகளுடன் இந்தப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது.

ரோஹித் சர்மா 55 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 5 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழந்தனர். 

இவர்கள் இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 74 பந்துகளில் 75 ரன்களைச் சேர்த்தனர். முதன் முறையாக இந்த உலகக்கோப்பையில் அசோசியேட் அணி ஒன்று பலவீனமாகத் தோற்றுள்ளது.

ஷிகர் தவன் ஆட்டத்தின் 5-வது ஓவரில் மொகமது நவீத் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். முதலில் ஒரு அபாரமான ஆன் டிரைவ் பவுண்டரி. அதுவும் பின்னங்காலில் சென்று அற்புதமாக ஆடினார். அடுத்து அவரது சாதகமான ஷாட். கவர் பாயிண்ட் திசையில் பவுண்டரி. அடுத்து பிளிக்கில் ஸ்கொயர்லெக் திசையில் பவுண்டரி. 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த அவர் அதே ஓவரில் ஷாட் பிட்ச் பந்தை பேக்வர்ட் பாயிண்டில் ரோஹன் முஸ்தபாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆட்டத்தின் 6-வது ஓவரில் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் குருகே வீசிய ஷாட் பந்தை அவ்வளவு சவுகரியமாக புல் ஆடாவிட்டாலும் பந்து பேக்வர்ட் ஸ்கொயர்லெக் திசையில் சிக்சருக்குப் பறந்தது.

அதன் பிறகு மொகமத் நவீத் பந்தில் ரொஹித்தும் 3 அபாரமான பவுண்டரிகளை விளாசினார். அதில் 2 அற்புதமான புல் ஷாட். இந்த ஷாட்டில் அவர் பெரிய அளவுக்கு தேறி விட்டார் என்பதை அதன் ஆதிக்கம் காட்டியது. 35 ரன்னில் இருந்த போது ஸ்பின்னர் டாகிர் பந்தில் ஸ்டம்பிங் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அவர் கால் கிரீசில் உரிய நேரத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு 2 பவுண்டரிகளை விளாசினார். பிறகு 48 பந்துகளில் அவர் அரைசதம் கண்டார்.

கோலியும் வழக்கம் போல் பேக்புட் பன்ச், கவர் டிரைவ், அழகான ஆன் டிரைவ் என்று பவுண்டரிகளை அடிக்க ஸ்கோர் வெற்றிக்கு அருகில் வந்தது. 19-வது ஓவரில் ஸ்பின்னர் டாகிர் வீச இறங்கி வந்து லாங் ஆஃபில் சக்தி வாய்ந்த ஷாட் மூலம் வெற்றிக்கான ஷாட்டை ஆடினார் ரோஹித் சர்மா.

ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அஸ்வினின் அபாரப் பந்துவீச்சில் சுருண்ட யு.ஏ.இ.

முன்னதாக, இந்த உலகக்கோப்பை தொடரில் அற்புதமாக வீசி வரும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்றும் தனது திறமையின் வெளியிடப்படாத புதிய பகுதிகளை வெளிப்படுத்தினார். இவர் தனது அருமையான ஃபிளைட், மாற்றம், வேகம் ஆகியவற்றினால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற யு.ஏ.இ. 102 ரன்களுக்குச் சுருண்டது. 

கடைசி விக்கெட்டுக்காக ஷைமன் அன்வர் குருகே இணைந்து 31 ரன்களைச் சேர்க்க யு.ஏ.இ. 31.3 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பெர்த் பிட்சில் நல்ல பவுன்ஸ் இருந்ததை வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் இருவரும் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனாலும் புவனேஷ் குமார் தனது முதல் ஓவரை வைடுடன் தொடங்கினார். கடைசி பந்தில் பெரெங்கர் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் யாதவ்வின் அடுத்த ஓவரில் ஒரு பவுன்சர் நல்ல அளவில் விழ அவர் ஹூக் செய்ய நேரம் இல்லை பந்து மட்டையில் பட்டு தோனியிடம் சுலபமாக கேட்ச் ஆனது.

கிருஷ்ண சந்திரன் களமிறங்கினார். ஆட்டத்தின் 5-வது ஓவரில் அம்ஜத் அலி (4) குமாரின் பவுன்சருக்கு தோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 6-வது ஓவரை உமேஷ் யாதவ் மெய்டனாக வீசிய போது அவர் 3-2-1-1 என்று அருமையாக வீசத் தொடங்கியிருந்தார். 

முதல் பவர் பிளே முடிந்தவுடன் 11-வது ஓவரில் அஸ்வின் கொண்டுவரப்பட கிருஷ்ண சந்திரன், அஸ்வினின் அருமையான பந்து ஒன்று அவரது கால்காப்பு, கிளவ்வில் பட்டு லெக்ஸ்லிப்பில் ரெய்னாவிடம் ‘பிடி’யாக மாறியது. 

12-வது ஓவர் மோஹித் சர்மா கொண்டு வரப்பட்டார். அவரும் நல்ல அளவில் வீசினார். ஆனால் 15-வது ஓவரில் 7 ரன்கள் எடுத்த பாட்டீல், அஸ்வினின் எதிர்திசையில் திரும்பிய பந்தை ஆட முயல பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு தவனிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. 

14 ரன்கள் எடுத்த குர்ரம்கான் அடுத்ததாக அஸ்வினின் நல்ல பந்தை தவறாக ஸ்வீப் செய்ய முயன்று ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

ஷைமன் அன்வர் களமிறங்கி மோஹித் சர்மாவை ஒரு புல்ஷாட் பவுண்டரி அடித்தார். ஆனால் எதிர்முனையில் ரொஹன் முஸ்தபா 2 ரன்னில் மோஹித் சர்மாவின் லேசாக ஆஃப் ஸ்டம்ப் நோக்கி ஸ்விங் ஆன பந்தில் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார். 

கடந்த போட்டியில் அருமையாக ஆடிய அம்ஜத் ஜாவேத் 2 ரன்னில் ஜடெஜா பந்து ஒன்று கூர்மையாகத் திரும்ப அவுட் ஆகி வெளியேறினார். ரெய்னா அவர் கொடுத்த கேட்சைப் பிடித்தார். 

மொகமத் நவீத் இறங்கியவுடன் ஜடேஜாவை லாங் ஆனில் சிக்ஸ் அடித்து ஆக்ரோஷம் காட்டினார். அதே ஓவரில் ரெய்னா ஒரு கேட்சை இவருக்கு விட்டார், இந்திய பீல்டர் ஒருவர் இந்தத் தொடரில் நழுவவிட்ட முதல் கேட்ச் இது என்று தெரிகிறது. ஆனால் அடுத்த அஸ்வின் ஓவரில் அவரது வேகப்பந்துக்கு நவீத் பவுல்டு ஆனார். அஸ்வின் முதன் முதலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன் பிறகு ஷைமன் அன்வர் மட்டுமே 35 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். இந்திய அணி வைடு வகையில் 9 ரன்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

அஸ்வின் 10 ஓவர்கள் 1 மெய்டன் 25 ரன்களுக்கு 4 விக்கெட். ஜடெஜா, உமேஷ் தலா 2 விக்கெட்டுகள். மோஹித், குமார் தலா 1 விக்கெட்.

இந்திய அணி 18.5 ஓவர்களில் 104/1 என்று அபார வெற்றி பெற்றது.