ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிபத்து!

Filed under: சென்னை |

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்த்தில் அங்கிருப்பவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தரைதளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மேல் தளத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் மக்கள் வெளியேற இயலாத சூழல் ஏற்பட்டிருந்தது.

ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதோடு, சென்னை குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகளும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

தற்போதைய தகவல்கள்படி தீ விபத்து ஏற்பட்டதுமே கீழ் தளத்தில் இருந்த 7 ஐசியு நோயாளிகள் உட்பட 11 பேர் உடனடியாக மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஓரளவு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் உள்ளே சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 10 பேர் கொண்ட குழு எரிந்த கட்டிடத்தினுள் சென்று பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருந்தபோதிலும், தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் நீடிக்கிறது. தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகை மேல் தளம் வரை செல்கிறது. மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையிலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்திய பிறகுதான் இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவரும்.