புது டெல்லி,மே 08
விசாகப்பட்டிணத்தில் நடந்த வாயுக் கசிவு விபத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் குறித்து ஆய்வு செய்ய, உயர் மட்டக் கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தலைமைத் தாங்கினார். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கும், பெரும் விபத்து நடந்த இடத்தை கையகப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நீண்ட ஆலோசனையை அவர் நடத்தினார். பாதுகாப்பு அமைச்சர், ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர், அமித் ஷா, உள்துறை இணை அமைச்சர்கள், நித்யானந்த் ராய் மற்றும் ஜி. கிஷன் ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
விபத்து குறித்த முதல் தகவலை இன்று காலையில் பெற்றவுடன், ஆந்திரப்பிரதேச முதல் அமைச்சரிடம் பேசிய பிரதமரும், உள்துறை அமைச்சரும் நிலைமையை சமாளிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தனர். நிலைமையை உன்னிப்பாகவும் தொடர்ந்தும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்தக் கூட்டம் முடிந்தவுடன், உள்துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும்பருவ நிலை மாற்றம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல், மருந்துகள், தகவல் மற்றும் ஒலிபரப்பு ஆகிய துறைகளின் செயலாளர்களுடனும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர், சுகாதாரச் சேவைகளின் தலைமை இயக்குநர், எய்ம்ஸ் இயக்குநர் மற்றும் இதர மருத்துவ நிபுணர்களுடனும் கள நிலவர மேலாண்மைக்கு உதவுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பிரதமரின் முதன்மைச் செயலாளரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.
புனேவில் இருந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையின் ரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி (CBRN) அலகின் குழு ஒன்று, நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NEERI) நிபுணர் குழுவுடன் இணைந்து, விசாகப்பட்டினத்துக்கு உடனடியாகச் சென்று நெருக்கடி நிர்வாகத்தில் களத்தில் நின்று மாநில அரசுக்கு உதவும் என்றும், கசிவின் குறுகிய கால மற்றும் நீண்ட கால பாதிப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கோபாலப்பட்டிணம் மண்டலில் உள்ள ஆர். ஆர். வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஸ்டைரின் வாயுக் கசிவு விபத்து ஏற்பட்டது. நராவா, பி சி காலனி, பாபுஜி நகர், கமலபாளையம் மற்றும் கிருஷ்ண நகர் ஆகிய சுற்றியுள்ள கிராமங்களை இது பாதித்தது. நச்சுத்தன்மையை உடைய ஸ்டைரின் வாயு, தோல் மற்றும் கண்களில் எரிச்சல், மூச்சுக் கோளாறு மற்றும் இதர உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.