விஜயகாந்த் முடிவால் திமுக அணிக்கு பாதிப்பில்லை: குஷ்பு !

Filed under: சென்னை,தமிழகம் |

Kushboo Congressசட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவால் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாதிப்பில்லை:

“சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவால் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என விரும்பினோம். ஆனால், விஜயகாந்த் வேறு முடிவு எடுத்துள்ளார். அது அவரது தனிப்பட்ட உரிமை. அவரது முடிவால் திமுக தலைமையிலான எங்கள் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

‘தமிழகத்தில் எதிர்ப்பலை’

தமிழக மக்கள் வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். தமிழகத்தில் எதிர்ப்பலை அதிகரித்து வருகிறது. அதிமுக அரசுக்கு மக்கள் நலன் மீது அக்கறையில்லை. இதுநாள் வரை மக்களுக்காக எவ்வித நலத்திட்டங்களையும் இதுவரை செயல்படுத்தாத அரசு இப்போது கடைசி ஒரு மாத காலத்தில் மட்டும் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது. மழை, வெள்ள பாதிப்பு என பல்வேறு பிரச்சினைகளில் அரசின் செயல்பாடுகளில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தேர்தலில் எதிரொலிக்கும் என குஷ்பு கூறினார்.

கோஷ்டி, சாதிக்கு இடமில்லை:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். சாதி அடிப்படையிலோ, கோஷ்டி அடிப்படையிலோ யாருக்கும் முன்னுரிமை அளிக்கப்படாது. காங்கிரஸ் கட்சி சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறினார்.