வீடு தேடி வரும் ஆவின் பால் !

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, ஏப்ரல் 24

கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும் இந்த ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆவின் பாலகங்கள்

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு, தனிமைப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட, பொது மக்களுக்கு தேவைப்படும் இடங்களில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தற்காலிகமாக ஆவின் கடைகள் அமைத்தும் நடமாடும் பாலகங்கள் ஏற்படுத்தியும் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மளிகைகடைகளில் ஆவின் பால்

பொது மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள் கொள்முதல் செய்யும் மளிகை கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் ஆகிய இடங்களில் ஆவின் பால் பொருட்கள் கிடைத்திட ஏதுவாக, ஆவின் முகவர் நியமன விதிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முகவர் நியமனத்திற்கான வைப்புத் தொகை ரூ. 1000/- ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரித்து கொள்ள ஆவின் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.

மேலும், மேற்கண்ட தொடர் நடவடிக்கைகளின் மூலமாக சென்னை மற்றும் தமிழகமெங்கும் தினசரிஆவின் பால் விற்பனை 22.50 லட்சத்திலிருந்து 24.50 லட்சமாக உயர்ந்துள்ளது. அதை போலவே பால் பொருட்களின் விற்பனையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வீடு தேடி வரும் ஆவின்

ஆவின் நிறுவனம் வெண்ணெய், நெய், பால்கோவா, நறுமணபால், ஐஸ் கிரீம் போன்ற பால் உபபொருட்களை சென்னை மாநகரில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இதில் 21 பாலகங்கள் குளிர் சாதன வசதி, சிறுவர் விளையாட்டு பூங்கா, Wi-Fi வசதி போன்ற வசதிகளுடன் அதிநவீன பாலகங்களாக (Hi-Tech Parlour) இயங்கி வருகின்றன.

தற்போது அதிநவீன பாலகங்களின் மூலம் நுகர் வோரின் வீடுகளைத் தேடிச் சென்று பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக ZOMATO மற்றும் DUNZO நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 24.04.2020 முதல் ZOMATO மற்றும் DUNZO நிறுவனங்கள் மூலமாக ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வோர் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன.

மேலும் தற்பொழுது ஊரடங்கு நிலவி வரும் நிலையில் சென்னை மாநகர பொது மக்களுக்கு தங்கு தடையின்றி, எவ்வித சிரமுமின்றி, நுகர்வோரின் வீடுகளைத் தேடி சென்று,பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க, ஆவின் நிறுவனத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே, பொதுமக்கள், நுகர்வோர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு பால் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.