தமிழ்நாட்டு மாணவர் ஏபிவிபி அமைப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி, எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன. அவ்வபோது மாணவ அமைப்புகளிடையே ஏற்படும் மோதல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நாசர் என்ற மாணவரை ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் இட்டுள்ள பதிவில், ஏபிவிபி அமைப்பினரால் தமிழ்நாட்டு மாணவர் நாசர் தாக்கப்பட்ட விவகாரம் தெரிய வந்ததும் மாணவரின் எண் கிடைத்ததும், இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்ததாகவும், உடனடியாக மாணவருக்கு வீடியோ கால் செய்த உதயநிதி ஸ்டாலின் மாணவருக்கு ஆறுதல் கூறியதுடன், தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் மாணவருடன் உதயநிதி பேசும் வீடியோவையும் அப்பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.