ஆசிரியர் மீது பதியபட்ட வழக்கில் திருப்பம்!

Filed under: தமிழகம் |

ஆபாச பாடம் நடத்தியதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை என்று ஆசிரியர் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஆனால் ஆசிரியர் மீது தவறில்லை என்றும், அவர்மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டுமென்றும் ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் சமீபத்தில் அப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் மாணவிகள் சிலர் கேள்விகளுக்கு பதில் எழுதாமல் சினிமா பாடல்களை எழுதி வைத்திருந்ததாகவும், அதை பலர் முன்னர் கிறிஸ்துதாஸ் படித்து காண்பித்து கண்டித்ததால் பழி நடவடிக்கையாக போலியான குற்றச்சாட்டை வைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.