இந்திய கிராமங்கள் வறுமையிலிருந்து விடுபடுவதே உண்மையான வளர்ச்சி: ராமதாஸ் !

Filed under: சென்னை,தமிழகம் |

S Ramadossஇந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 3 லட்சம் கோடி டாலர் என்ற அளவுக்கு வளர்ச்சியடைவதைவிட, கிராம மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டனர் என்பதே மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியா தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட இரு புள்ளிவிவரங்கள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத இருவேறு இந்தியாக்கள் இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன.

முதலாவது, இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (Gross Domestic Product -GDP) 2 லட்சம் கோடி அமெரிக்க டாலராக, அதாவது ரூ.120 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம். இரண்டாவது இந்தியாவின் ஊரகப்பகுதிகளில் நிலவும் வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட அவலநிலைகள் குறித்து சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள உண்மைகள்.

இந்திய மக்களின் சமூக, பொருளாதார நிலைமை குறித்த உண்மைகளை அறிவதற்காக நாட்டின் முதல் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

பல்வேறு தடைகளைக் கடந்து நடத்தி முடிக்கப்பட்ட அந்தக் கணக்கெடுப்பின் விவரங்கள் டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டன. ஊரக இந்தியா எவ்வளவு அவலமான நிலையில் உள்ளது என்பதை இந்த கணக்கெடுப்பு படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

இந்தியாவிலுள்ள 24.39 கோடி குடும்பங்களில் 73% அதாவது 17.91 கோடி குடும்பங்கள் கிராமங்களில் வாழ்கின்றன. கிராமங்களில் 8.3% குடும்பங்களில் மட்டுமே ரூ. 10,000க்கும் அதிகமாக மாத வருவாய் ஈட்டுபவர்கள் உள்ளனர். 74.5% குடும்பங்களில் உள்ளவர்களின் மாத வருவாய் ரூ.5,000க்கும் குறைவு தான்.

அதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களில் சுமார் 60%, அதாவது 10.69 கோடி குடும்பங்கள் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த நிலையில் உள்ளன. அதேபோல், 23.52% ஊரகக் குடும்பங்களில், 25 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. அதாவது இக்குடும்பங்களில் பட்டதாரிகள் இருக்க வாய்ப்பில்லை.

கல்வியிலும், பொருளாதாரத்திலும் ஊரக இந்தியா எந்த அளவுக்கு பின் தங்கியிருக்கிறது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஒருபுறம் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஆண்டு உற்பத்தி மதிப்பு 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்பது மிகப்பெரிய சாதனை. அதுமட்டுமின்றி, இந்தியர்களின் தனிநபர் வருமானம் ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அதன்படி ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக, அதாவது மாத வருமானம் ரூ.41,666 ஆக இருக்க வேண்டும்.

ஆனால், 74.50% ஊரக குடும்பங்களில் மாத வருமானம் ரூ. 5 ஆயிரத்திற்கும் குறைவு தான். தமிழகத்தில் இத்தகைய குடும்பங்களின் அளவு தேசிய சராசரியைவிட அதிகமாக 79% ஆக உள்ளது. ஒருவேளை ஒரு குடும்பத்தில் இருவர் வருவாய் ஈட்டினால் கூட அக்குடும்பத்தின் மாத வருமானம் ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கும். ஊரக வருமானம் குறைவாக இருப்பதால் நகர்ப்புற மக்களின் வருமானம் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த உண்மை.

இந்தியாவின் உற்பத்தி மதிப்பு முதல் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்ட 60 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றும், அடுத்த ஒரு லட்சம் கோடி டாலரை 7 ஆண்டுகளில் இந்தியா எட்டிவிட்டது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சி அடைகிறதோ, அதே வேகத்தில் ஏழை – பணக்காரர் வித்தியாசம் அதிகரிக்கிறது என்பது கடந்த காலம் உரைத்த உண்மை ஆகும். அதன்படி பார்த்தால் கடந்த 7 ஆண்டுகளில் தான் ஏழை -பணக்காரர்கள் இடைவெளி அதிகரித்திக்கிறது.

2007 ஆம் ஆண்டில் 11ஆவது ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டபோது ‘அனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சி’ என்ற முழக்கத்தை மத்திய அரசு முன் வைத்தது. ஆனால், அதன்பிறகு தான் மக்களிடையே பொருளாதார இடைவெளி அதிகரித்துள்ளது என்பதிலிருந்தே வளர்ச்சியின் பயன்கள் ஏழைகளுக்கு கிடைக்கவில்லை என்பதை உணர முடியும்.

அடுத்தபடியாக, நிலம் மற்றும் வேலைவாய்ப்புச் சூழலைப் பார்த்தால் அதிலும் கிராமப்புற மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இந்தியாவில் 25.63% குடும்பங்களிடம் மட்டுமே பாசன வசதியுடன் நிலங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் 12.10% குடும்பங்கள் மட்டுமே நிலம் வைத்துள்ளன.14.10% குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மாத வருவாய் கிடைக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளில் உள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு விழுக்காடு மட்டுமே. சுமார் 85% மக்கள் அமைப்பு சாரா பணிகளை மட்டுமே செய்கின்றனர். இவர்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு என எதுவும் கிடையாது.

இந்தியாவிலும், தமிழகத்திலும் நில உச்சவரம்பு சட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை என்பதை இந்த விவரங்கள் உணர்த்துகின்றன. அரசு வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாக கிடைப்பதும், தனியார் வேலைவாய்ப்புகள் கைக்கெட்டாத தூரத்தில் இருப்பதையும் இந்த தகவல்கள் உணர்த்துகின்றன.

அரசு வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில், தனியார் துறை வேலைவாய்ப்புகள் கிராமப்புற மக்களுக்கு கிடைக்க வேண்டுமானால் அதிலும் இட ஒதுக்கீட்டு முறை கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும் என்பதையே இப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புக்கான திட்டமிடலில் ஊரகப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டது, வேளாண்துறை கண்டுகொள்ளப்படாதது, கல்வி வாய்ப்புகள் போதிய அளவில் ஏற்படுத்தப்படாதது ஆகியவை தான் கிராமப்புற மக்களின் அவல நிலைக்கு காரணமாகும்.

இக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அவலங்களை கருத்தில் கொண்டு அவற்றை போக்குவதற்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய 3 துறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 3 லட்சம் கோடி டாலர் என்ற அளவுக்கு வளர்ச்சியடைவதைவிட, கிராம மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டனர் என்பதே மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாக இருக்கும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.