பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் சாலை இல்லாததால் இளம் பெண்ணின் உடலை பல கி.மீ தொலைவுக்கு மரக்கட்டையில் கட்டி உறவினர்கள் சுமந்து சென்ற அவலத்தை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனில்லாமல் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி மலையடிவாரத்திலிருந்து எலந்தம்பட்டு கிராமம் வரை அவரது உறவினர்கள் தோள்களில் தூக்கி சுமந்து சென்றனர். இச்செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வேலூர் மருத்துவமனையில் இருந்து சாந்தியின் உடல் அவசர ஊர்தியில் எடுத்து வரப்பட்ட போதிலும், தொடர்ந்து கொண்டு செல்ல அடிப்படையான சாலைவசதிகள் கூட இல்லாத நிலையில், இந்த அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் நிகழ்வுகள் தமிழகத்திற்கு பெரும் அவமானம் ஆகும். அத்தகைய அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது. இனியாவது அரசு அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.