முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி சொத்து குவித்ததாக தொடர்ந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கே.பி.அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி அன்பழகன் குடும்பத்தில் உள்ள 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தாரரான கிருஷ்ணமூர்த்தி மேலும் ஒரு வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்ததும் இன்னும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.