சென்னை : கொரோனா என்கிற கொடூர கிருமி உலகம் முழுக்க கோரத்தாண்டவமாடி மனித குலத்தையே நிலைகுலைய செய்து கொண்டிருக்கின்ற இச்சூழலில் மனிதர்களை மட்டுமல்ல மனிதத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
கிட்டத்தட்ட இருநூறு நாடுகளை சிதைத்து சீரழித்துக்கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவை இருபத்தைந்தாவது இடத்திலும் இந்திய ஒன்றியத்திலிருக்கும் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையை முதலிடத்திலும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் தலைநகரமான சென்னையில் இருந்து தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அறத்தோடு சில கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.
உயர்நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியும் மத்திய அரசிடமிருந்து நிதி வராத நிலையில் கூட பல முன்னெடுப்புக்களை தாங்கள் செய்து வருவதை அறிகிறோம், மதிக்கிறோம். அதோடு, கண்ணுக்கு தெரியாத அந்த கிருமியை விரட்ட எங்கள் தாய் தமிழகத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் கொலைகார பருந்திடமிருந்து தங்கள் குஞ்சுகளை காக்க போர் தொடுக்கும் தாய்க்கோழியைப் போல தங்கள் உயிரை கொடுத்து மனித உயிர்களை காக்கும் அந்த தெய்வங்களுக்கு தலைவணங்குகிறோம்.
அவர்களின் வரிசையில் நின்று பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பல விமர்சனத்தை எதிர் கொண்டாலும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் காவலர்கள், மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் எங்களின் நெஞ்சம் நிறைந்த பெருநன்றிக்கு உரியவர்களே.
இந்திய ஒன்றிய அரசு இருபத்தொரு நாள் ஊரடங்கு அறிவித்து முடியும் தருவாயில் இருக்கின்ற இந்நாட்களில் மீண்டும் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தை அவரும் அவருடன் காணொலியில் பங்கெடுத்த கட்சிகளின் பிரதிநிதிகளும் பேசியதை கண்டோம். அனேகமாக பல மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும்போது இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடும் என்பதை யதார்த்தம் நமக்கு உணர்த்துகிறது. ஊரடங்கு என்பதே ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதுதான். ஆனால் காலையிலிருந்து மதியம் வரை மனிதர்கள் இந்தியாவெங்கும் தங்கள் ஊர்களில், சந்தைகளில், கடைகளில் தங்களின் தேவைக்கு கூட்டம் கூட்டமாக நடமாடிக் கொண்டுதான் இருந்தார்கள், இருக்கிறார்கள். இதே நிலை நீடித்து ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது இடத்திலிருக்கும் இந்தியா கொரோனாவால் பேராபத்தை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை. முப்பது கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் முன்னணி, பணக்கார நாடான அமெரிக்கா போன்ற நாடுகளே திணறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நூற்று முப்பது கோடி மக்களை கொண்ட இந்தியாவும் அதிலும் குறிப்பாக எட்டு கோடி மக்களுக்கு மேலாக வாழும் தமிழ் நாட்டிலும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை இப்போதே திட்டமிட வேண்டும்.
அதற்கு நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க ஊரடங்கு உத்தரவை நூறு சதவிகிதம் நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் நடமாடும் விற்பனை அங்கன்வாடிகளை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து ஊர்களிலும், வீதிகளிலும் செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி, பஞ்சாயத்து ஊழியர்கள், உறுப்பினர்கள் மூலமாக மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டு அந்தந்த ஊர்களில் உள்ள சில தன்னார்வ இளைஞர்களை தேர்ந்தெடுத்து ஊக்கத்தொகை ஒன்றை வழங்கி அவர்களையும் இணைத்துக் கொண்டு ஒவ்வொருவர் வீடுகளுக்கும சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டும். இதனால் மக்கள் வெளியே வராமல் நோய் தொற்று நிரந்தரமாக துண்டிக்கப்படும்.
இந்தியாவிலேயே கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழும். மற்ற மாநிலங்களுக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.
மேலும் 11.04.2020 சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு தமிழக அமைச்சரவை கூடவுள்ள நிலையில் ஏழைகள், விவசாயிகள், தினக்கூலிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என நம் மக்கள் தொகையில் எண்பது சதவிகிதம் பேர் அன்றாடம் காய்ச்சிகளாக வாழுகின்ற தமிழகத்தில் சமீபத்தில் வழங்கப்பட்ட ரூபாய் ஆயிரமும் நியாய விலைக்கடை பொருட்களும் அவர்களுக்கு ஒருபோதும் காணாது என்பதை வெளியுலகத்திற்கு தெரியாமல் தங்களுக்குள்ளாகவே குமுறிக் கொண்டிருக்கும் அவர்களது மன நிலையை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறேன். மேலும் ஊரடங்கு நீட்டிக்கப் படுகின்ற சூழலில் அடுத்தகட்ட நிவாரணமாக ரூபாய் இரண்டாயிரமும் நியாய விலைக்கடையின் மூலமாக அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ. கௌதமன் கோரிக்கை.